ஆப்தே வேலைக்குச் சேருவதற்கு முன்பே அவருக்கு திருமணம் நடந்தது. ஆப்தேயை கலந்தாலோசித்து நடந்ததா அல்லது அவருடைய ஒப்புதலோடு நடந்ததா எனக் கூற இயலாது. பெற்றோர்கள் முடிவுச் செய்து,இத்திருமணத்தை நடத்தினர்.
ஃபெட்டரே ( FEDTARE ) குடும்பம் என்று பூனாவில் அறியப்பட்ட செல்வாக்கு மிக்க, செல்வந்தரின் குடும்பத்தைச் சேர்ந்த சம்பா எனும் பெண், ஆப்தேக்கு மனைவி ஆனார்.
ஒரு விதத்தில், இதை இரு குடும்பங்களின் ‘ வசதிக்கான திருமணம் ‘ என்று குறிப்பிடலாம். வேலையில் சேர்ந்த ஆப்தே கடுமையாக உழைத்தார்.
உடன் வேலை பார்த்தவர்கள், மாணவர்கள் என அனைவரிடையேயும் பிரபலமானார்.
1938 ல், அஹமத் நகரில் இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடுவதில் பயிற்சி அளிக்கும் சங்கம் ( RIFLE CLUB ) ஒன்றைத் துவக்க விரும்பினார். அப்போது பம்பாய் மாகாணத்திலிருந்த காங்கிரஸ் அரசாங்கமும் இதற்கு அனுமதி அளித்தது.
போலி தோட்டாக்கள் தான் உபயோகிக்கப்பட்டது என்றாலும், மத்தியிலிருந்த ஆங்கிலேய அரசாங்கம், இத்தகைய சங்கங்களை சந்தேகத்தோடேயே பார்த்தது.
ஆப்தேவுடைய சங்கத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, ஒரு வருடத்திற்குள்ளாக பூனா உள்ளிட்ட பல நகரங்களில் இது போன்ற சங்கங்கள் உருவாயின. 1939ல், அஹமத்நகரிலிருந்த ஹிந்து மகா சபா கிளையில்,ஆப்தே சேர்ந்தார்.
அங்கே… பின்னாளில் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்ற விஷ்ணு கர்கரேயை முதன் முதலாகச் சந்தித்தார்.
கர்கரே துறுதுறுப்பானவர்.நடுத்தர உயரம் கொண்டவர், சுருள் சுருளான கருப்பு முடி, தீர்க்கமான கண்கள்… பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்.
தன் சுயமுயற்சியால் அஹமத் நகரில் ஹிந்து மகா சபையின் கிளையைத் துவங்கி அந்த பகுதியின் முக்கியத் தலைவராக இருந்தார். ஆரம்பத்தில், கர்கரேக்கு ஆப்தேயை பிடிக்கவில்லை, ஆப்தேக்கும் கர்கரேயை பிடிக்கவில்லை.
ஆப்தே ஒரு கிறிஸ்துவ பள்ளியில் வேலை செய்து வந்ததால், அவர் ஒரு நல்ல ஹிந்து இல்லை என கர்கரே கருதினார். கர்கரே கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தாலும், சொல்லிக் கொள்ளத்தக்க குடும்பப் பின்னணி இல்லாதவர், போதிய படிப்பறிவு இல்லாதவர் என்பதாக எண்ணம் கொண்டு, ஆப்தே, கர்கரேயிடம் நெருங்கவில்லை.
பின்னாளில் நாதுராம் கோட்ஸேதான் இருவரையும் இணைத்தார். இந்தக் காலக் கட்டத்தில், ஆப்தேக்கு கட்சி வேலையில் பெரிய ஈடுபாடு ஒன்றும் இருக்கவில்லை.
ஆசிரியர் தொழிலில்தான் ஈடுபட வேண்டுமென்று விரும்பினார். அதற்காக விசேஷ முயற்சி எடுத்து பி.டி. பட்டமும் பெற்றார். ஆப்தேக்கு ஒரு மகன் பிறந்தான். மிகவும் மகிழ்ந்து போன ஆப்தே, அவனை ‘ பாப்பன் ‘ என்று செல்லமாக அழைத்து வந்தார்.
ஆனால், குழந்தைக்கு இரண்டு வயது இருந்த போது,அதற்கு போதிய மூளை வளர்ச்சியில்லை என்று அறிந்து நொறுங்கிப் போனார் ஆப்தே.
பித்துப் பிடித்தவர் போல ஆனார். ஆசிரியர் தொழிலைக் கை விட்டார். அஹமத் நகரையும், அதன் நினைவுகளையும் விட்டொழிக்க அங்கிருந்து வெளியேறினார்….
1942ல் ‘ வெள்ளையனே வெளியேறு ‘ போராட்டத்தை தொடர்ந்து பெரும்பாலும் காங்கிரஸ் தலைவர்கள் சிறையிலிருந்தார்கள். சாவர்க்கரின் ‘ ஹிந்து மகா சபா ‘ அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுக் கொண்டிருந்தது.
ஒரு அரசியல் கட்சி நேரடியாகச் செய்ய முடியாத காரியங்களைச் செய்வதற்காக, ஒரு ரகசிய இயக்கத்தை துவக்க சாவர்க்கர் முடிவுச் செய்தார்.
அந்த அமைப்பிற்கு ‘ ஹிந்து ராஷ்ட்ர தள் ‘ என பெயரிட்டார். இது 1942 ஆம் ஆண்டு மே மாதம் துவக்கப்பட்டது. பின்னாளில் ‘ தள் ‘ என்றே மக்களிடையே ‘ புகழ் ‘ பெற்றது.
நாதுராம் கோட்ஸேயும், நாராயண் ஆப்தேயும் இதன் முக்கிய பொறுப்பாளர்கள் ஆனார்கள்.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
– எழுத்து : யா.சு.கண்ணன்