பாரதிக்கு ஒரு பிச்சைக்காரி போட்ட பிச்சை..!

உரத்த சிந்தனை கட்டுரைகள் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

bharathiar - 2026

முண்டாசுக் கவி, முறுக்கு மீசைப் புலவன் என்று பாரதியைக் கொண்டாடுகிறோம். அவனைப் படிக்காதவர்கள் கூட இந்த இரண்டு வார்த்தைகளை வைத்துக் கொண்டு ஜல்லியடித்துவிட்டுப் போவது வழக்கம்தான் இங்கே.

விழியோ, செவியோ, இதழோ இல்லாமல் ஒரு முக்கோணம், முறுக்கு மீசை இவற்றை வரைந்தால் அதை பாரதி எனப் பச்சைக் குழந்தைக் கூட அடையாளம் கண்டு கொள்ளும். ஆனால் மீசை இல்லாமல் பாரதி எழுதிய கவிதை ஒன்றுண்டு.

  1. புதுவை வாழ்க்கை சலித்துவிட்டது பாரதிக்கு. அவன் மனம் ஆன்மீகம் நோக்கிக் கனியத் தொடங்கியிருந்தது. ஒரு மாறுதலுக்காக யாருமறியாத இடத்தில் போய் பத்து நாள் இருந்து வரலாம் என நமக்குத் தோன்றுவது போலே அவனுக்கு(ம்) தோன்றியது.

நினைத்த மாத்திரத்தில் கிளம்புவதைப் போலவா அவனுக்கு வாழ்க்கை லபித்தது. அவன் புதுவையை விட்டு வெளியேறிய அடுத்த நிமிடம் அவனை அள்ளிக் கொண்டு போகக் காத்திருந்தது உளவுத் துறை.

ஆனால் காற்றைக் கையிலா சிறை வைக்க முடியும். புறப்படு என்று உள்ளம் அவனை உந்திக் கொண்டே இருந்தது.

தலைப்பாகையைக் கழற்றிப் போட்டான். மீசையை மழித்துக் கொண்டான். தாடியை வழித்தெறிந்தான். தலை ஏற்கெனவே வழுக்கை, அதை முண்டனம் செய்து கொண்டான்.

ஆனாலும் அடையாளம் கண்டு கொண்டுவிடுவார்களோ என்று ஒரு அரைச் சந்தேகம். அந்தக் கோலத்தில் அண்டை வீட்டில் இருந்த மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியாரைப் பார்க்கப் போனான். அன்றாடம் அவர் வீட்டுக்குப் போய் அரட்டை அடிப்பதும், அவர் மகள் யதுகிரியோடு விளையாடி விட்டு வருவதும் அவன் வழக்கம்.

இந்தக் கோலத்தில் பாரதியைக் கண்ட குழந்தை அடையாளம் தெரியாமல் யாரோ அன்னியன் என்றெண்ணி மிரண்டது. அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டது. அவர் நிமிர்ந்து பார்த்து யாரப்பா நீ என்றார்

பாரதிக்கு உற்சாகம் ஊற்றெடுத்தது. அன்றாடம் பழகியவர்களாலேயே அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்றால் காவலர்களால் கண்டு கொள்ள முடியாது என்பதைக் கண்டு கொண்டான்

புதுவையிலிருந்து அவன் போன இடம் மன்னார்குடிக்கு அருகில் உள்ள நாகை (நாகப்பட்டினம் அல்ல) அதை இன்று மேல நாகை என்று அழைக்கிறார்கள். அங்கே ஒரு பிடாரி அம்மன் கோயிலருகே அமர்ந்து எழுதிய பாடல்தான் “பாருக்குள்ளே நல்ல நாடு”

அந்தப் பாட்டிற்கான மெட்டு எங்கிருந்து கிடைத்தது தெரியுமா? அது அரண்மனை வளாகங்களில் அரும்பியதில்லை. மாளிகைத் தோட்டத்தில் மலர்ந்ததில்லை. இசையரங்குகளில் இருந்து பெற்ற இரவல் இல்லை. ஆலயங்கள் அருளிய பிரசாதம் அல்ல.

நாகைக்குப் பயணம் செய்யும் வழியில் ஒரு பிச்சைக்காரி பாடிய பாடலில் இருந்து பெறப்பட்டது.! (இந்துஸ்தானி மெட்டில் அமைந்த அதை இந்துஸ்தானி தோடி என்று பாரதி குறிக்கிறான்)

அது ஒரு பிச்சைக்காரி போட்ட பிச்சை!

(ஆகஸ்ட் 15 அன்று அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகவிருக்கும் என் உரையிலிருந்து… சிறு பகுதி!) 

– மாலன் நாராயணன் (மூத்த பத்திரிகையாளர்)

1 thought on “பாரதிக்கு ஒரு பிச்சைக்காரி போட்ட பிச்சை..!”

  1. இங்கிவனை நாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்! திரு மாலனின் கட்டுரை அருமை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.