சிதம்பரம் விரும்பிய படி சிபிஐ., காவல்! தில்லி நீதிமன்றம் அனுமதி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
Chidambaram - 2026

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ., காவல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. கடந்த 9 நாட்களாக ப.சிதம்பரம் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 நாட்களுக்கு சிபிஐ காவல் தில்லி நீதிமன்றத்தால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ.,யினால் கைது செய்யப் பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, முதலில் 4 நாட்களும், பிறகு 5 நாட்களும் சிபிஐ., காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில், அவருக்கு இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட காவல் இன்றுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில் ப.சிதம்பரம் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிதம்பரத்தை மேலும் 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. புதிதாக கிடைத்துள்ள விவரங்கள், ஆவணங்களின் அடிப்படையில் சிதம்பரத்திடம் விசாரிக்க வேண்டியுள்ளது என்று சிபிஐ கூறியது.

11 May18 delhi high court - 2026

ஆனால் மேலும் 5 நாள் காவல் கோர சிதம்பரம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், சிபிஐ காவலில் அனுப்பப்பட்டதற்கு எதிரான மனு வரும் திங்கள் அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பதால், அதுவரை சிபிஐ காவலில் இருக்கத் தயார் என்று ப.சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து ப.சிதம்பரத்தை மேலும் 3 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.