என்கவுண்டர் தீர்வாகாது: கதறலில் கனிமொழி!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
kanimozhi - 2026

தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப் பட்டு படுகொலையான சம்பவத்தில், இன்று காலை போலீஸார் இந்தக் குற்றத்தில் கைதான 4 பேரையும் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

இந்த என்கவுண்டர் சம்பவம், அந்தப் பெண் படுகொலைக்குக் கிடைத்த நியாயத் தீர்ப்பு என்று கூறி, பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆயினும், தாங்கள் தூக்குதண்டனை மூலம் விரைந்த நீதியையே எதிர்பார்த்தோம் என தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா தெரிவித்தார்.

அது போல் வேறு சிலரும், விரைவான நீதி வழங்கப் பட்டு, அரசு நடவடிக்கை மூலம் தண்டனை கிடைத்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

இது போல் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி.

அவர் இது குறித்துக் கூறிய போது, ‘இது போன்ற கொடூர குற்றங்களை செய்தவர்கள் மோசமாக தண்டிக்கப்பட வேண்டியது தேவை தான். ஆனாலும் இதற்கு என்கவுண்டர் தான் தீர்வா? நாட்டில் சட்டமும் நீதிமன்றமும் இருக்கிறது. அதன் மூலம் கடுமையான தண்டனையை காவல்துறை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.

இது ஜனநாயக நாட்டில் ஏற்றுக் கொள்ளமுடியாதது. இதன் மூலம் குற்றம் செய்யாதவர்கள் பலியாகும் சூழல் நிகழ வாய்ப்புள்ளது. இதைத் தொடர்ந்து மக்களே நீதி வழங்குவதை ஒரு நேரத்தில் கையிலெடுத்தால் நீதிமன்றங்கள் என்னவாகும் என்பதையும் யோசித்து பார்க்க வேண்டும்.

ஆகவே அரசாங்கம் தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தி விடக்கூடாது. இதே தண்டனை நீதிமன்றம் மூலமாக கிடைத்திருந்தால் எல்லோரும் ஏற்றுக்கொண்டிருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நிர்பயா வழக்கில் கடந்த 7 வருடங்களாக நீதி பெற்றுத் தந்த லட்சணம் என்ன என்று தெரியாதா எனவும் கனிமொழியில் கருத்துக்கு பலர் பதில் அளித்து வருகின்றனர். குற்றவாளிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் செயல் இது என்று கனிமொழிக்கு பதில் கூறுகின்றனர் சிலர்.

இதே போல், பாஜக.,வைச் சேர்ந்த வானதி சீனிவாசனும், இம்மாதிரி கடுமையான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தண்டனை கொடுக்க வேண்டும். மேலும் என்கவுண்டர் செய்வதற்கான சூழல் இருந்தால் அதை காவல் துறைதான் முடிவு செய்யவேண்டும்… என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.