nia - 2026

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு போலீஸ் அதிகாரி தாவீந்தர் சிங் உதவிய வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று பல இடங்களில் சோதனை நடத்தினர்.

தெற்கு காஷ்மீரில் குவாசிகுன்ட் அருகே கடந்த மாதம் 11-ம் தேதி இரவு ஸ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் நிற்காமல் சென்ற காரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.

அந்தக் காரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) தாவீந்தர் சிங் என்பவரும் அவருடன் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த நவீத் முஷ்டாக் அகமது, ரபி அகமது ரதேர், இர்பான் ஷபி மிர் ஆகியோர் இருப்பது தெரிந்தது. தீவிரவாதிகளுக்கு டிஎஸ்பி தாவீந்தர் சிங் உதவி வருவதும் தெரிந்தது.

இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாவீந்தர் சிங் உட்பட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே, நகரில் உள்ள தாவீந்தர் சிங் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தி நவீன ரக துப்பாக்கிகளைக் கைப்பற்றினர்.

இதனிடையே, நவீன் முஷ்டாக் அகமதுவின் சகோதரரும் தீவிரவாதியுமான சையத் இர்பான் அகமது என்பவரை சமீபத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் பாகிஸ்தானுக்கு 5 முறை சென்றுவந்துள்ளார் என்பது தெரிந்தது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ போலீஸ் அதிகாரிகள் குழுவினர் நேற்று தெற்கு காஷ்மீரில் தனியார் அலுவலகங்கள், வீடுகள் என பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதில் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆதாரங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வந்த நிலையில் அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending