ஆளும் கூட்டணி மாறியது; ஆனால் அதே முதல்வர்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற நிதிஷ்!

Published:

modi nithish - 2026

பாட்னா:
பீகார் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை இன்று முற்பகல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபித்தார்.

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளைக் கொண்ட மெகா கூட்டணி தேர்தல் களத்தில் நின்று வெற்றி பெற்று, பீகாரில் ஆட்சியமைத்தது. முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிதிஷ் குமாரும், துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர். சுமார் 2 ஆண்டுகள் இந்தக் கூட்டணி ஆட்சியில் இருந்தாலும், அவ்வப்போது உரசல்களும் இருக்கத்தான் செய்தன. ஆனால் இந்த மெகா கூட்டணியில் ஒரு மெகா விரிசல் ஏற்படக் காரணமாயிருந்தது, லாலுவின் மகன் தேஜஸ்வி மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள்! ரயில்வே ஹோட்டல்களுக்கு டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ., வழக்கு பதிந்து விசாரணையைத் தொடங்கியது. இதை அடுத்து தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் விரும்பியது. ஆனால் அதை லாலு மறுத்தார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இதனால் அதிருப்தி அடைந்த நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை நேற்று முன்தினம் அதாவது புதன் இரவு ராஜினாமா செய்தார். அவ்வாறு செய்த வேகத்தில், அடுத்த அதிரடியாக, பாஜக., வுடன் கூட்டணியில் சேர்ந்தார். ஏற்கெனவே பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தவர் என்பதால், இந்த முறை பாஜக., தனது ஆதரவை அளித்தது. இதை அடுத்து நிதிஷ் குமார் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை ஏற்ற ஆளுநர், அரசு அமைக்க நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி நேற்று வியாழக்கிழமை காலை பீகார் முதல்வராக நிதிஷ் குமாரும் துணை முதல்வராக பாஜகவைச் சேர்ந்த சுஷில் குமாரும் பதவி ஏற்றனர்.

இந்நிலையில் நிதிஷ் குமாரை 2 நாட்களுக்குள் சட்டமன்றத்தில் தன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார். அதன்படி பீகார் சட்டசபையின் ஒருநாள் சிறப்புக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில், முதல்வர் நிதிஷ் குமார் தனது பெரும்பான்மையை நிரூபித்தார். 243 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 108 வாக்குகளும் பதிவாயின.  ஐக்கிய ஜனதா தளத்துக்கு 71 உறுப்பினர்களும், பாஜக.,வுக்கு 53 உறுப்பினர்களும், பாஜக., கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 பேரும், ஆர்.எல்.எஸ்.பி 2 பேரும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா செக்யுலர் கட்சிக்கு 1 உறுப்பினரும் உள்ளனர். இவர்கள் அனைவரும் நிதிஷுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

நிதிஷ் குமாரின் அரசு ஒருநாளும் இயல்பாக இயங்க விட மாட்டோம் என ராஷ்டிரிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது. பீகார் மக்கள் முதுகில் நிதிஷ் குத்தி விட்டார் என்று புகார் கூறியுள்ள அக்கட்சி, சபையை நடத்த விட மாட்டோம் என்றும் கூறியது. இதனிடையே நிதிஷ் குமாரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தது தவறு என்று அறிவிக்கக் கோரி பாட்னா உயர் நீதிமன்றத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ வழக்கு தொடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி போல், இங்கே சிஎம் போர்ட்டபிளிட்டி என்று பீகார் விவகாரம் குறித்து நெட்டிசன்கள் பலர் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர். ஒரே எண் தான், ஆனால் சேவை வழங்கும் நிறுவனம் வேறு என்பது போல், இங்கே ஒரே முதல்வர்தான், ஆனால் ஆளும் கூட்டணிதான் வேறு என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img