லீ குவான் யூ உடலுக்கு அஞ்சலி செலுத்த சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் அலுவலகம் அனுமதி மறுப்பு

இந்தியா

புது தில்லி: திங்கள் அன்று மரணமடைந்த சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்பட்டவரும் முன்னாள் பிரதமருமான லீ குவான் யூ உடலுக்கு அஞ்சலி செலுத்த சிங்கப்பூர் செல்வதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் அலுவலகம் அனுமதி மறுத்துள்ளது. லீயின் உடல் அடக்கம் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக, லீ குவான் யூ உடலுக்கு அஞ்சலி செலுத்த சந்திரபாபு நாயுடு புதன் கிழமை இரவு சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டார். மாநில முதல்வர் வெளிநாடு செல்ல வேண்டும் எனில் மத்திய வெளியுறவுத் துறையிடம் அனுமதி பெறவேண்டும். அதன்படி, ஆந்திர அரசு அனுமதி கோரி கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் சந்திரபாபு நாயுடு சிங்கப்பூர் செல்ல பிரதமர் அலுவலகம் அனுமதி மறுத்து விட்டது. லீ குவான் யூ உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்ல இருக்கிறார். நாட்டின் பிரதமர் செல்வதற்கு முன்பாக அரசு சார்பில் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. பிரதமர் அனுமதி அளித்தால் நீங்கள் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் செல்லலாம்’’ என்று பிரதமர் அலுவலகச் செயலாளர் பதில் அனுப்பியுள்ளார். இதனால் சந்திரபாபு நாயுடுவின் சிங்கப்பூர் பயண திட்டம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அவர் பிரதமர் மோடியுடன்  சிங்கப்பூருக்குச் செல்வாரா? என்பது குறித்து தகவல் இல்லை. மேலும், உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இந்தக் காரணத்தால் சிங்கப்பூருக்கு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். எனவே உலக தலைவர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகள் தவிர வேறு யாருக்கும் சிறப்பு அனுமதி வழங்க முடியாது என்று சிங்கப்பூர் அரசு முன்னர் தெரிவித்திருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.