ப.சிதம்பரம் மகன் கார்த்தியைக் கைது செய்தது சிபிஐ

இந்தியா சற்றுமுன் சென்னை வணிகம்

ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐ.,யால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

கார்த்தி சிதம்பரத்துக்கு நெருக்கமான பட்டயக் கணக்காளர் பாஸ்கர்ராமன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டது சிபிஐ., பின்னர் அவர் ரிமாண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் லண்டன் சென்றிருந்த கார்த்தி சிதம்பரம், இன்று காலை சென்னை திரும்பியவுடன் அவரைக் கைது செய்தது சிபிஐ.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு இந்திய வெளிநாட்டு முதலீடு ஆணையம் உரிமம் வழங்கிய விவகாரத்தில், ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில், ஐ.என்.எக்ஸ் நிறுவன தலைவர் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி, மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உட்பட பலர் மீது அமலாக்கத்துறையும் சிபிஐ.,யும் வழக்குகளைப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டது.

மோசடி, சட்டவிரோதமாக பணம் பெற்றது, அரசு ஊழியர்களை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கார்த்தி சிதம்பரம், பீட்டர், இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. கார்த்தி சிதம்பரம், பீட்டர் – இந்திராணியின் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் மூலம் பணம் பெற்றார் என்பது குற்றச்சாட்டு.

தங்கள் நிறுவனம் மீது இருந்த வரிப் புகாரை சரிகட்டுவதற்காக பீட்டர் – இந்திராணி கார்த்தி சிதம்பரத்தின் செல்வாக்கை பயன்படுத்தியதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. மொரீஷியஸில் இருந்து அன்னிய முதலீடுகளைப் பெறுவதற்கு கடுமையான நிபந்தனைகள் இருந்ததால் அதனை சட்டவிரோதமாக செய்வதற்காக கார்த்தி சிதம்பரம் பணம் பெற்றார் என்று கூறுகிறது சிபிஐ.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.