காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: முடங்கிய மாநிலங்களவை; முடக்கிய அதிமுக.,!

இந்தியா சற்றுமுன் தமிழகம்

புது தில்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் விவாதம் குறித்து இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரச்னையை எழுப்பியது அதிமுக., இதனால் அவை நாள் முழுதும் ஒத்திவைக்கப் பட வேண்டியதாயிற்று!

கடந்த ஜனவரி 29ஆம் தொடங்கிய நாடாளுன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2 பகுதிகளாக நடைபெறுகிறது. முதல் பகுதி பிப்ரவரி 9ல் நிறைவு பெற்றது. தொடர்ந்து 2ஆவது அமர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், மாநிலங்களவை இன்று தொடங்கியதும், புதிய உறுப்பினர் பதவி ஏற்பு, மறைந்தவர்களுக்கு அஞ்சலி இவற்றைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மைத்ரேயன் தலைமையில் அதிமுக., எம்பி.,கள் அமளியில் ஈடுபட்டனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேசம் எம்பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 11. 20 வரை ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் அவை தொடங்கியதும் மீண்டும் அதிமுக., தெலுங்கு தேசம் எம்பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் குறித்து விவாதம் நடத்தக் கோரி கோஷம் எழுப்பினர்.

கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் சபை கூடியதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக., எம்பி.,க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்கக் கோரி அதிமுக எம்பி., நவநீத கிருஷ்ணன் மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம் நோட்டீஸ் அளித்தார். இது தொடர்பாக நேரமில்லா நேரத்தின் போது விவாதிக்கப்படும் என்று அதிமுக., எம்பி., நவநீதகிருஷ்ணன் நோட்டீஸை ஏற்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்தார்.

முன்னதாக, இரு தினங்களுக்கு முன்னர், திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரத்துக்காக தமிழக எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.