
நேற்று பாகிஸ்தான் மீது பாரத விமானப் படை தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது. பாரத விமானப்படை துல்லியத் தாக்குதல் நடத்தி, 9 பயங்கரவாத பயிற்சி முகாம்களை அழித்தது. இதில் அந்த முகாம்களில் இருந்த பயங்கரவாதிகள் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று பாகிஸ்தான் மீது அதானி – இஸ்ரேல் தயாரிப்பில் உருவான ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. இதில், மேலும் பல பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் மீது பாரதம் நடத்திய துல்லியமான ‘‘தற்கொலை ட்ரோன்கள்’ இன்று முற்பகல் லாகூரின் ராணுவ விமான நிலையத்தில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்தின.
முன்னதாக, பாரதம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். அவை அத்தனையையும் முறியடித்தது பாரதத்தின் எஸ் 400 என்ற, சுதர்ஷன சக்ர பாதுகாப்பு அமைப்பு.
இந்நிலையில், சீனாவிடம் இருந்து வாங்கிய ஹெச்-க்யு 9 வான் பாதுகாப்பு அமைப்பு, இந்திய விமானங்கள் எதையும் கண்டறியவோ, எதிர்த் தாக்குதல் தொடுக்கவோ இல்லை. இந்தியாவின் விமானங்களும் ட்ரோன்களும் பாகிஸ்தானை பலமாக பதம் பார்த்தன. ஆனால், பாகிஸ்தான் இன்றூ காலை ஏவிய ஏவுகணைகள், மூன்று விமானங்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு எஸ் 400 முறியடித்து, வானிலேயே அழித்தது.
இதனிடையே, இன்று காலை லாகூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது யார் என்ற கேள்வி எழுந்தது. காரணம், இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக ட்ரோன் தாக்குதல் குறித்து எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. அதே நேரம், பலுசிஸ்தான் விடுதலைப் படையினர் இன்னொரு புறத்தில் பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி தலைவர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசிய போது, ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்றார்.
அப்போது அவர் குறிப்பிட்டதாவது: கூட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தார். அனைத்துத் தலைவர்களும் தங்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள். அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக செயல்படுத்திய இந்திய ராணுவத்தினருக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார்கள். மேலும் நாங்கள் மத்திய அரசுக்கும், ராணுவத்தினருக்கும் முழு ஆதரவு அளிப்போம் என்று கூறினார்கள்.
அதிகாரத்திற்காக மட்டும் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடரும் என்றார் கிரண் ரிஜிஜூ.
இதன் மூலம் ஆபரேஷன் சிந்தூர் என்பது தொடர்கிறது என்பது உறுதியானது. அதன்படி, இன்று காலை முதலே ட்ரோன்கள் மூலமான தாக்குதல்கள் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.





