
கேரளாவில் இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக, ஆச்சரியப்படுத்தும் வகையில் வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக திருவனந்தபுரம் மேயராக பாஜக.,வின் நபர் பதவியேற்க உள்ளார். மேலும் அரசியல் எதிர்பார்ப்புக்கும் மேல் பாஜக., பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக.,வின் இந்த வெற்றியை தொண்டர்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். எனினும் வழக்கம் போல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியே பெருவாரியான வெற்றியைப் பெற்றுள்ளது. ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி பெரும் சரிவைக் கண்டுள்ளது.
இந்நிலையில், கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை. தோல்வி குறித்து விரிவாக ஆராயப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்
உள்ளாட்சித் தேர்தல்களில், எவரும் எதிர்பார்க்காத வகையில் ஆளும் இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி பெரும் சரிவைச் சந்தித்து, காங்கிரஸ் கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களில் வென்றுள்ளது. ஆளும் கூட்டணி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், தேர்தலில் இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி, பெருவெற்றியை எதிர்பார்த்தது. ஆனால் அந்த முன்னேற்றத்தை அடைய முடியவில்லை. இதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி விரிவாக ஆராயப்படும். தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பின்னர் மீண்டும் முன்னேறுவோம். வகுப்புவாத சக்திகளின் தவறான தகவல், பிளவு தந்திரங்களுக்கு மக்கள் பலியாகி விடாமல் இருப்பதை உறுதி செய்ய, அதிக விழிப்புணர்வு தேவை என்பதற்கான எச்சரிக்கையாக தேர்தல் முடிவுகள் உள்ளன.
அனைத்து வகையான வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்பதின் அவசியம், இந்த தேர்தல் முடிவுகள் மூலம் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. மக்களின் ஆதரவுடன் முன்னேற, இடதுசாரிகள் ஜனநாயக முன்னணியானது விரிவாக விவாதித்து, முடிவுகளை எடுக்கும். வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்த மக்கள் ஆதரவை மேலும் வளப்படுத்தவும், அதன் அடிப்படையை பலப்படுத்தவும் உறுதியுடன் செயல்படுவோம் – என்று அந்த அறிக்கையில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திருவனந்தபுரம் மாநகராட்சியை, பாஜக., கைப்பற்றியுள்ளது. அங்கே மெஜாரிட்டிக்கு தேவையான அளவில் 50 இடங்களைத் தொட்டுள்ளது பாஜக., 101 உறுப்பினர் மாமன்றத்தில் பெருவாரியான உறுப்பினர்களுடன் பாஜக., கூட்டணி நுழைவதால், பாஜக.,வில் கடந்த வருடம் சேர்ந்தவரும், கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், முன்னாள் டிஜிபியுமான ஸ்ரீலேகா மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
கடந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் பெருவெற்றி பெற்ற இடதுசாரி முன்னணியில் இருந்து பெண் உறுப்பினரான ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரத்தின் இளம் மேயராக பதவியேற்றார். இப்போதும் அதேபோல் ஒரு பெண்மணிக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடும்.
திருவனந்தபுரத்தின் சாஸ்தாமங்கலம் வார்டில் பாஜக வேட்பாளரான ஸ்ரீலேகா வெற்றி பெற்றிருக்கிறார். தமது வெற்றி குறித்து அவர் குறிப்பிட்ட போது, சாஸ்தாமங்கலம் வார்டில் இதற்கு முன்னர் வேறு எந்த வேட்பாளரும் இவ்வளவு முன்னிலையில் வெற்றி பெற்றது இல்லை என்பதை அறிந்தேன். இப்படியான தீர்ப்புக்காக மக்களுக்கு நன்றி கூறுகிறோம். யார் மேயராக அறிவிக்கப்பட இருக்கிறார்கள் என்பதை கட்சி மேலிடம் முறைப்படி அறிவிக்கும் என்று கூறினார்.
வெற்றி பெற்றுள்ள ஸ்ரீலேகா கேரள காவல்துறையின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி. சிபிஐ, குற்றப்பிரிவு, ஊழல் தடுப்பு, சிறை, மோட்டார் வாகனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியவர். 2017ல் டிஜிபி.,யாக பதவி உயர்வு பெற்று, கேரளாவின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையைப் பெற்றார். 33 ஆண்டு பணிக் காலத்தை நிறைவுசெய்து 2020ல் ஓய்வு பெற்றார். 2024ல் பாஜக.,வில் இணைந்தவர், தற்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.
பாஜக., பெரிதும் எதிர்பார்த்த சுரேஷ் கோபியின் தொகுதியான திருச்சூரில் பாஜக.,வுக்கு பெரிதும் வெற்றி கிட்டவில்லை. அதே நேரம், கண்ணூரில் ஒரு உறுப்பினர் என்ற எண்ணிக்கையில் இருந்து இப்போது 4 உறுப்பினர்கள் என்ற அளவுக்கு பாஜக., முன்னேற்றம் கண்டுள்ளது. கண்ணூர் கம்யூனிஸ்ட்களின் கோட்டை என்பது குறிப்பிடத் தக்கது.
வக்பு சட்டத்திருத்த விவாதத்தில் முக்கிய இடம் பிடித்த கேரளாவின் முனம்பம் பகுதியிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. கேரள மாநில பாஜ பொதுச் செயலாளர் அனூப் ஆண்டனி ஜோசப் தன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது…
வக்ப் வாரியத்தின் சட்டவிரோத உரிமைக் கோரல்களால் ஐநூறு கிறிஸ்தவ குடும்பங்கள் வெளியேற்றப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டது முனம்பம். இங்கு உள்ளாட்சித் தேர்தலில் , தேஜ., கூட்டணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது. மோடி அரசும் பாஜக.,வும் வக்ப் வாரியத்தின் சட்டவிரோதச் செயல்களுக்கு எதிரான போராட்டத்தில் முனம்பம் மக்களுக்கு துணை நின்றதால், அம்மக்கள் பாஜக.,வை தங்கள் வார்டு பிரதிநிதியாக தேர்வு செய்துள்ளனர் – என்று அவர் எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் பாஜக., அடைந்துள்ள வெற்றி, வரலாற்றுச் சாதனை என்று அத்தொகுதியின் காங்கிரஸ் எம்பி., சசி தரூர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இன்றைய கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிக கவனம் பெற்றுள்ளன. மக்களின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. கேரளாவின் ஜனநாயக உணர்வு வெளிப்பட்டுள்ளது. பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளிலும் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு (யுடிஎஃப்) மனமார்ந்த வாழ்த்துகள். இது வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான முன்னோட்டம். ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர். இது 2020 தேர்தலை விட மிகச் சிறப்பான முடிவுகள். அதேபோல, திருவனந்தபுரத்தில் பாஜக., அடைந்துள்ள வெற்றி ஒரு வரலாற்று சாதனை. இடதுசாரி கூட்டணியின் 45 ஆண்டுகால முறையற்ற ஆட்சியை எதிர்த்து நான் பிரசாரம் செய்தேன். இறுதியில் ஆட்சி முறையில் மாற்றத்தை விரும்பிய மக்கள், மற்றொரு கட்சிக்கு வாக்களித்துள்ளனர். இதுவே ஜனநாயகத்தின் அழகு. காங்கிரஸ் கூட்டணி அடைந்த வெற்றியாக இருந்தாலும், எனது தொகுதியில் பாஜக., கூட்டணி பெற்ற வெற்றியாக இருந்தாலும், மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். கேரளாவின் வளர்ச்சிக்காகவும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், நல்லாட்சிக் கொள்கைகளை உறுதிப்படுத்துவதற்காகவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் – என்று குறிப்பிட்டுள்ளார்.




