தேர்தல் படுத்தும் பாடு: லிங்காயத் சமூகத்தை தனிப் பிரிவாக அங்கீகரித்தது கர்நாடகா

இந்தியா சற்றுமுன்

lingayat veerasaiva - 2026

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வருகிறது. இதை ஒட்டி ஓட்டுக்காக பல்வேறு பிரிவினைவாதச் செயல்களில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அண்மையில் கர்நாடக மாநிலத்துக்கு என தனி கொடி அறிமுகம் செய்து அதனை அங்கீகரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இப்போது மீண்டும் அதே போன்ற ஒரு செயலில் ஈடுபட்டுள்ளது ஆளும் காங்கிரஸ் கட்சி.

கர்நாடக மாநிலத்தில் பரவலாக வசிக்கும் லிங்காயத் சமூகத்தினர், தங்களை இந்து மதத்தில் இருந்து பிரித்து தனி பிரிவாக அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை கையாள்வதற்காக நாகமோகன் தாஸ் தலைமையில் மாநில அரசு ஒரு கமிட்டி அமைத்திருந்தது. இந்தக் கமிட்டி பரிந்துரை செய்ததன் பேரில் லிங்காயத் சமூகத்தை தனிப் பிரிவாக அம்மாநில அமைச்சரவை இன்று அங்கீகரித்தது. இதே கோரிக்கையை பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு மாநில அரசு அனுப்பி வைத்துள்ளது.

12ம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவண்ணரை குருவாகக் கொண்ட லிங்காயத் சமூகத்தினர் தங்களை வீர சைவர்கள் மரபில் இருந்து தனித்து அறிவித்துக் கொள்கின்றனர். வீர சைவர்கள் பொதுவான ஒரு இந்து சமூகக் கட்டுக்குள் சனாதன தர்மத்தை அடிஒற்றி இருப்பவர்கள். இதனால் வேத கோட்பாடுகளை மறுதலித்த லிங்காயத் பிரிவினர், தங்களை தனி மதப் பிரிவினராக அங்கீகரிக்கக் கோரினர். இதற்காக தொடர்ந்து போராட்டங்களையும் செய்து வந்தனர். லிங்காயத் சமூக வழிபாடும் சடங்குகளும் இந்து சமூகத்துக்குள் அடக்கம் என்றாலும், லிங்காயத் பிரிவினரின் இந்தக் கோரிக்கைகள் பாஜக உள்ளிட்ட இந்து சமய அமைப்புகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாகத்தான் இருந்தது. இதற்காக பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. ஆனால், அவர்களின் கோரிக்கையை ஏற்றது ஆளும் கர்நாடக காங்கிரஸ். எனவே இது தொடர்பாக பரிந்துரை செய்ய குழு அமைத்தது.

இந்நிலையில் நேற்று முதல்வர் சித்தராமையாவை சந்தித்துப் பேசினர் லிங்காயத் சமூக மடாதிபதிகள். இந்நிலையில் இன்று கர்நாடக அமைச்சரவை லிங்காயத்துகளின் கோரிக்கையை பரிசீலித்து, அவர்களை தனிப் பிரிவாக அங்கீகரித்தது. பின் இது மத்திய அரசுக்கும் அனுப்பப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.