அரசு விளம்பரங்களில் தலைவர்கள் படங்களுக்கு தடை: மறுபரிசீலனை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

Published:

புது தில்லி:

அரசு விளம்பரங்களில் தலைவர்கள் படங்களுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் முறையிடப்பட்டுள்ளது.

அரசு செலவில் வெளியிடப்படும் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி படங்களைத் தவிர, வேறு அரசியல் தலைவர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று கடந்த மே 13ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், சிபிஐஎல் என்ற அமைப்பு சார்பில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில், ‘அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சில மாநில அரசுகள் மீறியுள்ளன. குறிப்பாக, தமிழகம் மற்றும் தில்லி மாநில அரசுகள் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதால், அந்த அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இம்மனு மீது மத்திய அரசு பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இம்மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பினாகி சந்திர கோஸ் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜரானார். அப்போது, ‘அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் படங்கள் இடம் பெறக் கூடாது என்ற உத்தரவு தவறானது. இதில் எந்த கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது. எனவே, உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று முறையிட்டார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இதுதொடர்பான வழக்கை ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த காமன்காஸ் அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ‘அரசு விளம்பரம் தொடர் பான உச்ச நீதிமன்ற உத்தரவை சில மாநில அரசுகள் மதிக்கவில்லை. மத்திய அரசு 6 மாதங்கள் கழித்து, உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி மனு தாக்கல் செய்கிறது. அரசு விளம்பரங்களை கண்காணிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை குழுவை அமைக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் தாமதிப்பதும், அவகாசம் கோருவதும் இந்த உத்தரவின் நோக்கத்தையே சிதைத்துவிடும்’ என்று வாதிட்டார்.

இவ்வாறு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் முறையீட்டை வரும் ஜனவரி 12ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர். இதை அடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img