அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் முறைகேடு: இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் இடைத்தரகர் கிறிஸ்டின் மைக்கேல்!

இந்தியா சற்றுமுன்

AugustaWestland chrisitanmichael - 2026

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் முறைகேடு வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டின் மைக்கேல் ஜேம்ஸ் விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகளால் இந்தியா அழைத்து வரப்பட்டார்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐ.மு.கூட்டணி அரசில், குடியரசுத் தலைவர் பிரதமர் போன்றோருக்காக 12 அதி நவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் இடைத் தரகராக செயல்பட்டவர் பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டின் மைக்கேல் ஜேம்ஸ்.

ஜேம்ஸ், அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து சுமார் 225 கோடி ரூபாய் கமிஷன் பெற்றார் என்று குற்றம் சாட்டப் பட்டது. சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் இவர் மீது குற்றச்சாட்டை பதிவு செய்தன. அந்தத் தொகை அப்போதைய ஆளும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள் சிலருக்கு பகிர்ந்தளிக்கப் பட்டதாகக் கூறப் படுகிறது.

இந்த வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார் கிறிஸ்டின் மைக்கேல் ஜேம்ஸ். இது குறித்து ரெட் அலர்ட் எச்சரிக்கை இவர் குறித்து விடுக்கப் பட்டது. பின்னர் இவர், துபாயில் கைது செய்யப்பட்டார்.

57 வயதாகும் ஜேம்ஸை விசாரணைக்காக அனுப்பி வைக்கும்படி இந்தியா கோரிக்கை விடுத்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று, அவரை அனுப்பிவைக்க துபாய் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இது தொடர்பாக, அபுதாபி வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் ஜயீத்துடன் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சிபிஐ தற்காலிக இயக்குனர் நாகேஸ்வர ராவ் முயற்சியில், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மேற்கொண்ட நடவடிக்கைக்களால் ஜேம்ஸ் இந்தியா வரவழைக்கப் பட்டுள்ளார் என்று சிபிஐ., கூறியுள்ளது.

இதைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் மைக்கேல் துபாய் விமான நிலையம் அழைத்து வரப்பட்டு அங்கிருந்து தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தில்லி விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட அவரை கைது செய்து சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

பின்னர், சிபிஐ தலைமை அலுவலகத்தில் மைக்கேலிடம் விடிய விடிய 12 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.