நாளை தில்லி திரும்புகிறார் ராகுல்: தடபுடலாக வரவேற்க இளைஞர் காங்கிரஸார் திட்டம்

புதுதில்லி: சுமார் 2 மாத கால மிக நீண்ட ஓய்வுக்குப் பின்னர் அகில இந்திய காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாளை தில்லிக்குத் திரும்புகிறார். அவருக்கு தடபுடலாக வரவேற்பு கொடுக்க இளைஞர் காங்கிரஸார் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ராகுல் விடுப்பு எடுத்துச் சென்றது கட்சியினர் மட்டுமல்லாது, பொது மக்கள் மத்தியிலும் பல்வேறு ஊகங்களைக் கிளப்பின. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வியால் ராகுல் மிகவும் அதிருப்தியும் விரக்தியும் அடைந்தார் என்றும், காங்கிரசுக்கு மீண்டும் புத்துணர்ச்சி கொடுக்கவும், அதை செயல்படுத்தவும் ராகுல் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யப்போகிறார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இரு மாதங்களுக்கு முன்னர் கட்சியில் விடுப்பு எடுத்துக் கொண்டு ராகுல் திடீரென காணாமல் போனார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் கலந்து கொள்ளாமல் சென்றதால், அவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார்… என்பது பற்றியெல்லாம் பல்வேறு ஊகங்கள் உலவின. இடையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மாற்றப்பட்டதில், சோனியாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வெளிநாடு சென்றதாகவும் கூறப்பட்டது. மேலும், அவர் ஒரு பெண்ணை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றும், குளியல் அறையில் வழுக்கி விழுந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூட செய்திகள் உலவின. ஒவ்வொரு முறையும் அவர் இன்று திரும்புவார், நாளை திரும்புவார் என்று கூறப்பட்டு, அது பொய்யாகி, இதனால் ராகுலை யாரும் கண்டு கொள்ளாத நிலை உருவானது. இந்நிலையில், தில்லியில் வரும் 19 ஆம் தேதி நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நடத்தும் விவசாயிகள் பேரணியில் ராகுல் கலந்து கொள்வார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அறிவித்தனர். இதனை காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோணி உறுதி செய்தார். இதன் மூலம் ராகுல்காந்தி இந்த வாரம் தில்லிக்குத் திரும்புவது உறுதியானது. இதனால், அவர் புதன்கிழமை நாளை தில்லி திரும்புவார் என்று கூறப்படுகிறது. நாளை தில்லி திரும்பும் ராகுலுக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்க தயாராகி வருகிறார்கள்.