
தெலுங்கானா மாநிலம் அதிலாபாத்தில் இறப்புக்குப் பிறகும் கூட கொரோனா நோயாளிகளுக்கு உரிய கவுரவம் கிடைப்பதில்லை. இறந்த கொரோனா நோயாளிகளின் பாதி எரிந்த உடல்களை நாய்கள் தின்னும் புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அதிலாபாத்தில் மவாலா கிராமத்தில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட இடுகாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படுகின்றன. ‘கொரோனாவினால் இறந்த ஒருவரின் உடலை எரிக்க 5 முதல் 6 குவிண்டால் விறகு தேவைப்படும். ஆனால் தெலங்கானாவில் மாநகராட்சி அலுவலர்கள் 3 குவிண்டால்தான் அளிக்கின்றனர். இதோடு மட்டுமல்லாமல் மாநகராட்சி அதிகாரிகள், பாதி எரிந்த நிலையில் உள்ள உடல்களை அப்படியே விட்டுவிட்டுச் செல்கின்றனர்.
அந்த உடல் பாகங்கள் தெருநாய்களுக்கு இரையாகின்றன’ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலாபாத் மவாலா கிராம மக்கள் கூறுகையில், ‘உடலுக்குத் தீ வைத்தவுடன் உறவினர்களும், ஊழியர்களும் இடுகாட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர். உடல் முழுவதும் எரிகிறதா என்பதைக் கண்காணிக்க யாரும் அங்கு இருப்பதில்லை’ என்றனர்.
இதுகுறித்து அதிலாபாத் நகராட்சி உதவி ஆணையர் கூறுகையில், ‘அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இதே இடத்தில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் 7 உடல்கள் தான் எரிக்கப்பட்டுள்ளன’ என்றார்.