அரசு பஸ்ஸில் பயணம் செய்த முன்னாள் காங். எம்.எல்.ஏ., திடீர் மரணம்!

Published:

gopal bhandary - 2026

அரசு பஸ்சில் பயணம் செய்த முன்னாள் எம் எல் ஏ திடீரென மரணம் அடைந்துள்ளார்.

முன்னாள் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கோபால் பண்டாரி பெங்களூரில் இருந்து மங்களூருக்கு வியாழக்கிழமை நேற்று அரசு பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மரணம் அடைந்ததாகத் தெரியவருகிறது.

முன்னாள் எம்எல்ஏ.,வான கோபால் பண்டாரி கர்நாடக மாநில அரசு பஸ்ஸில் பெங்களூரில் இருந்து மங்களூருக்கு சென்று கொண்டிருந்தார்! திருவெக்கர அருகில் கே.பி. கிராஸ் பகுதியில் காபி குடிப்பதற்காக பஸ்சை நிறுத்தினார் டிரைவர். மதியம் இரண்டு மணி அளவில் அவர் தனது பயணத்தை பெங்களூருவில் தொடங்கினார். பின்னர் நான்கு முப்பது மணி அளவில் காபி குடிக்க வாகனத்தை டிரைவர் நிறுத்தியுள்ளார். தொடர்ந்து இரவு 10.15 மணி அளவில் மங்களூரு பெஜாய் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப் பட்ட போதுதான் கேஎஸ்ஆர்டிசி பஸ் டிரைவர் அவரை கவனித்துள்ளார். அவர் இருக்கையிலேயே மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்ததை அறிந்தார்!

உடனடியாக மங்களூரு வென்லாக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

இதை அடுத்து வியாழன் நேற்று இரவு வீரப்ப மொய்லியும் மங்களூரு முன்னாள் எம்.எல்.ஏ., ஜே ஆர் லோபோவும் மருத்துவமனை சென்று பார்த்து வந்தனர். தனது 67வது பிறந்த நாளுக்கு மூன்று தினங்கள் முன்னதாக இவர் காலமானது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் கர்நாடகம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கர்கலா தொகுதியில் போட்டியிட்டு, 1999-2004, 2008-2013 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 2008ல் பாஜக.,வின் சுனில்குமாரைத் தோற்கடித்தவர். 2018ல் அதே சுனில் குமாரிடம் தோற்றுப் போனார்.

Related articles

Recent articles

spot_img