ஜெயலலிதா விடுதலைக்காக பொதுப்பணித் துறை அதிகாரிகள் பதவி உயர்வுக் கோப்புகளை கிடப்பில் போட்டிருக்கும் குறுகிய அரசியல் மனப்பான்மை நிலவுகிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்துள்ள செய்தியில்,,
“ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற பிறகு தான் பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் முடிவு செய்து இருப்பதால் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.
பொதுவாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பதவி உயர்வு வழங்கப்படும். இந்த முறை நிர்வாக பொறியாளர் பதவிக்கு 45 பேருக்கும் மேற்பார்வை பொறியாளர் பதவிக்கு 22 பேருக்கும் பதவி உயர்வு பட்டியல் தயார் செய்து ஜனவரி மாதமே அனுப்பி விட்டார்கள். ஆனால் இதுவரை பதவி உயர்வு உத்தரவு வரவில்லை. இதனால் 33 நிர்வாக பொறியாளர் மற்றும் 13 மேற்பார்வை பொறியாளர் பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அதன் காரணமாக பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
அதிமுக அரசின் பொறுப்பு இல்லாத செயலாலும், பெரும் நிர்வாக சீர்கேட்டாலும் நிலவும் குழப்பத்தால் மக்கள் தங்களுக்கு வேண்டிய திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் அவதிப்படுகிறார்கள்.
குறுகிய அரசியல் மனப்பான்மை உடன் செயல்படாமல் தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு உரிய நலத் திட்டங்களில் கவனம் செலுத்தும்படி அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்”
என்று கூறியுள்ளார்