ஒரிஜினல் லைசென்ஸுடன் செல்லுங்கள்; 6 வகை விதிமீறல்களுக்கு காட்ட வேண்டும்: இன்று முதல் கட்டாயம்!

Published:

சென்னை:
இன்று முதல் ஒரிஜினல் லைசென்ஸுடன் வெளியில் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டும். 6 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு போக்குவரத்து போலீசார் கண்டிப்பாக அசல் ஓட்டுனர் உரிமங்களைக் கேட்பார்கள் என்று போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் பெரியய்யா தெரிவித்தார்.

தமிழகத்தில் புதன் கிழமை இன்று முதல் வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுனர் உரிமங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் ஆணையர் பெரியய்யா செய்தியாளர்களிடம் பேசிய போது, வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமங்களை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. இதற்காக போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி, அசல் ஓட்டுனர் உரிமங்களைக் கேட்கமாட்டார்கள். வழக்கம்போல போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் எடுக்கப்படும் நடவடிக்கையை மட்டுமே போலீசார் எடுப்பார்கள்.

ஹெல்மட் அணியாமல் செல்பவர்கள், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிச்செல்பவர்கள் ஆகியோரிடம் அசல் ஓட்டுனர் உரிமங்களைக் கேட்கமாட்டார்கள். இதுபோன்ற குற்றங்களைச் செய்பவர்களிடம், விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும். பின்னர் அந்த இடத்திலேயே அதற்கு உண்டான அபராதம் விதிக்கப்படும்.

6 வகையான போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத வாகன ஓட்டிகளிடம் மட்டும் அசல் ஓட்டுனர் உரிமங்களை போலீசார் கேட்பார்கள். அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், அதிக பாரம் ஏற்றிச் செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல் போன்ற 6 விதிமீறல்கள் மட்டும் கடுமையான குற்றமாகக் கருதப்படும்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இந்தக் குற்றங்களை செய்பவர்களிடம் போக்குவரத்து போலீசார் அசல் ஓட்டுனர் உரிமங்களைக் கேட்பார்கள். இந்த 6 விதிமீறல்களில் ஈடுபடுவோரின் அசல் ஓட்டுனர் உரிமங்கள் முதல் கட்டமாக 3 மாதம் தாற்காலிகமாக ரத்து செய்யப்படும். 2ஆவது முறை தவறு செய்தால் 6 மாதங்கள் ஓட்டுனர் உரிமங்கள் ரத்தாகும். தொடர்ந்து தவறு செய்பவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்படும். பொதுவாக அசல் ஓட்டுனர் உரிமங்களை வாகன ஓட்டிகள் வைத்திருப்பது நல்லது. விபத்துகளை தடுக்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழு அறிவுரைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று கூறினார்.

Related articles

Recent articles

spot_img