வாட்டர் ஹீட்டர் கை வைத்து ஒன்றரை வயது குழந்தை மரணம்!

சற்றுமுன் தமிழகம்
water-heater
water-heater

வாணியம்பாடி அருகே ‘வாட்டர் ஹீட்டரை’ தொட்ட ஒன்றரை வயது பெண் குழந்தை மின்சாரம் பாய்ந்து இன்று உயிரிழந்தது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (25). தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா (22). இவர்களுக்கு அனன்யா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவித்ரா தன் மகளை அழைத்துக்கொண்டு வாணியம்பாடி அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றார்.

இன்று (செப். 1) காலை 9 மணியளவில் குழந்தை அனன்யாவை குளிக்க வைப்பதற்காக வீட்டில் இருந்த பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ‘வாட்டர் ஹீட்டர்’ கருவியை பொருத்தி தண்ணீரை சூடுபடுத்தினார்.
அந்த நேரத்தில் தெருக்குழாயில் தண்ணீர் வந்ததால் குழந்தை அனன்யாவை வீட்டில் விளையாட வைத்துவிட்டு பவித்ரா தண்ணீரை பிடிக்க தெருவுக்கு சென்றார்.

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அனன்யா ‘வாட்டர் ஹீட்டரு’டன் இருந்த தண்ணீரில் கையை வைத்தது. அப்போது, குழந்தை மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பவித்ரா உட்பட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

அப்போது, குழந்தை பேச்சு மூச்சின்றி மயங்கிய நிலையில் கிடந்தது. உடனே, குழந்தையை தூக்கிக்கொண்டு பவித்ரா வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மின்சாரம் தாக்கியதில் குழந்தை அனன்யா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதைகேட்ட பவித்ரா அங்கேயே கதறி துடித்தார். இது குறித்து வந்த தகவலின் பேரில் வாணியம்பாடி தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேல்பள்ளிப்பட்டு பகுதியில் மின்சாரம் பாய்ந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.