madurai annamalai - 2026

ஜன.26 குடியரசு தினம் சார்…சுதந்திர தினம் இல்லை: ஸ்டாலினுக்கு அண்ணாமலை நினைவூட்டல்!

சற்றுமுன் Featured தமிழகம் லைஃப் ஸ்டைல்
madurai annamalai - 2026

ஜன.26 குடியரசு தினம் சார்…சுதந்திர தினம் இல்லை: என்று, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக., தலைவர் அண்ணாமலை பதில் அளித்திருக்கிறார்.

மேலும், பாரதியார் எப்போதும் தன்னை பாரதத் தமிழராக அடையாளப்படுத்துவதில் பெருமிதம் கொண்டார். அவரை திலகத்துடன் உருவப்படுத்துங்கள் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

கே.அண்ணாமலை இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்,

தமிழக மக்களும் சமூக ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் துணிச்சலுடன் அரசு தந்த பொங்கல் பரிசு, நலக்கேடு தரும் கலப்படம் மிக்கதாக இருப்பதை வெளிச்சப்படுத்தி போராடி வருகின்றனர். அதனால் மத்திய அரசுடன் மோதலை உருவாக்கி, மக்கள் கோபத்தில் இருந்து தப்பிக்க எண்ணும் முயற்சி பலன் அளிக்கப் போவதில்லை.

தில்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனம் பங்கு பெற தகுதி அடிப்படையில் தேர்வு பெறாத செய்தியை தவறாக சித்திரிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மகாகவி சுப்ரமணிய பாரதி தலைசிறந்த தேசியவாதி. தீவிரமான ஆன்மிகப் பற்றுள்ளவர். அவர் கண்ட கனவு அகண்ட பாரதம். அதுவே பாஜக.,வின் தாரக மந்திரம். இந்த ஒவ்வாமையால் தான், நீங்கள் பாரதியை விட பாரதிதாசனை அதிகம் கொண்டாடினீர்கள்.

பாரதியார், திமுக.,வின் கொள்கைகளுக்கு எதிரானவர். தற்போது திமுக., அரசு நடைமுறைப்படுத்தும் இனவாதம், மதவாதம், தேசிய எதிர்ப்பு, மொழிப் பிரிவினை, ஊழல் போன்ற கொள்கைகளை எல்லாம் எதிர்த்து நின்றார். நீங்கள் அவரை காட்சிப்படுத்த வேண்டிய சூழலில், அவர் நெற்றியில் அணிந்திருந்த திருமண் திலகத்தை தவிர்த்து விட்டீர்கள். அவர் எப்போதும் தன்னை பாரதத் தமிழராக அடையாளப்படுத்துவதில் பெருமிதம் கொண்டார். அவரை திலகத்துடன் உருவப்படுத்துங்கள்.

தலைமைக்கு உயர்த்தும் வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரம் மற்றும் குயிலியின் தியாகம் மிக்க வாழ்க்கை, எந்த ஒரு சமூகப் பிரிவைச் சேர்ந்தவரையும் தலைமைக்கு உயர்த்தும் தகுதி மிக்கது. நீங்கள் மரபுரிமையாக அனுபவிக்கும் தலைமைப் பொறுப்பை அடைய ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்கள் நிரூபித்தார்கள்.

தன்னிகரற்ற தேசியவாதியாக இருந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, தீவிரமான தேசப்பற்று மிக்கவர். அவர் எப்போதுமே தனி மாநிலம் பற்றி பேசியதில்லை. நாட்டிற்காக எடுத்த உறுதியான நிலைப்பாட்டிற்காக, அவர் கடுமையான தண்டனைகளை அனுபவித்தார். அவருடைய ஆன்மிக ஆளுமையும், தெய்வீக தன்மையும், ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து அவர் பெற்ற உத்வேகத்தையும் மறைக்க முடியுமா; மறுக்க முடியுமா?

திமுக., ஆட்சிக் காலத்தில் இருந்து, பள்ளிப் பிள்ளைகளுக்கு உள்நோக்கத்துடன் வடிகட்டிய வரலாற்றைத் தானே வகுப்பறையில் கொடுத்துள்ளீர்கள். தமிழை தெய்வமாக நாங்கள் வணங்குவது போல நீங்கள் வணங்க விரும்பவில்லை. தமிழில் இருந்து தோன்றிய உயர் சிறப்புமிக்க பிற தென்னிந்திய மொழிகளையும் ஒதுக்கினீர்கள்.

இதுபோல உங்கள் காலத்தில் இருந்து துவங்கும் ‘எடிட்’ செய்யப்பட்ட வரலாறுகளைத் தவிர்த்து, பள்ளிப் பாடப் புத்தகங்களில் வார்த்தைகளில் உண்மை வைத்து, வரலாறை எழுத வைத்து, இந்த மாமனிதர்களின் வாழ்க்கையை பள்ளிச் சிறார்கள் படிக்கத் தந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். இறுதியாக ஒரு நினைவூட்டல், ஜனவரி 26 நாட்டின் குடியரசு தினமே தவிர, நம் சுதந்திர தினம் அல்ல… என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.