காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கொலைசெய்த தாய்மாமன்..

Published:

pdy3 - 2026

புதுச்சேரி யை அடுத்த திருபுவனை அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை தாய்மாமனே படுகொலை செய்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை அடுத்த திருபுவனை அருகே உள்ள சன்னியாசிக்குப்பத்தை சேர்ந்தவர் நாகராஜ் (49) இவருக்கும் மயில் என்பவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் மயில் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். இதையடுத்து அம்பிகா என்பவரை நாகராஜ் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கீர்த்தனா உள்பட 4 மகள்களும், அபினேஷ் என்ற ஒரு மகனும் உள்ளனர்.  இதில் மூத்த மகள் அங்காளம்மாள் திருமணமாகி கணவர் வீட்டிற்கு  சென்று விட்டார்.  இரண்டாவது மகள் அருகில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். கீர்த்தனா (18) கலிதீர்த்தால் குப்பத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.காம் பயின்று வருகிறார். மற்ற இருவரும் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். 

இந்நிலையில், நாகராஜனின் முதல் மனைவி மயிலின் தம்பி மகன் முகேஷ் (22) கீர்த்தனாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  இதற்கு கீர்த்தனா மறுப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. அடிக்கடி கீர்த்தனாவிடம் தகராறு செய்து என்னை தவிர்த்து வேறு யாரிடமும் பேசினால் கொலை செய்து விடுவேன் என்று அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். 

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை  5:15 மணி அளவில் தனியார் பேருந்தில் இருந்து சன்னியாசிக்குப்பம் கடைவீதியில் இறங்கி வீட்டிற்கு செல்ல கீர்த்தனா முற்பட்டபோது கத்தியுடன் மறைந்திருந்த முகேஷ் கீர்த்தனாவின் கழுத்து மற்றும் கை கால் பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீர்த்தனா சரிந்து கீழே விழுந்தார். 

உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி வந்ததை பார்த்து முகேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.ரத்த காயங்களுடன் விழுந்து கிடந்த கீர்த்தனாவை மீட்டு மதகடிப்பட்டு உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே கீர்த்தனா இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து தகவல் அறிந்து வந்த திருபுவனை போலீசார் மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக  கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பி ஓடிய முகேஷை போலீசார் தேடி வருகின்றனர். 

ஒரு தலை காதலால் நடந்த கொலை அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

இதில் கொலையாளியாக கருதப்படும் முகேஷ் ஏற்கனவே திருவண்டார் கோயில் பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையில் வெடிகுண்டு வீசிய வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img