Dhinasari Home page

இமாச்சலப்பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனம் கவிழ்ந்து ஏழு பேர் பலி..

சற்றுமுன்

இமாச்சலப்பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இமாச்சல பிரதேசம் மாநிலம் குல்லு மாவட்டத்தின் பஞ்சார் பள்ளத்தாக்கின் கியாகி பகுதியில் ஞாயிறு இரவு, சுற்றுலா வாகனம் ஒன்று குன்றிலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர், மேலும் 10 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து நேற்று இரவு 8:30 மணியளவில் என்.எச் 305 இல் நடந்தது. இதுகுறித்து குல்லு மாவட்டத்தின் துணை ஆணையர் அசுதோஷ் கர்க் கூறுகையில், முதல்கட்ட தகவலின்படி, டிரைவர் உட்பட 17 பேர் வாகனத்தில் பயணம் செய்தனர்.

விபத்து நடந்ததையடுத்து தகவலறிந்து, போலீசார், ஊர்க்காவல்படையினர் மற்றும் உள்ளூர் நிர்வாகக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து எஸ்.பி கூறும்போது, இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர், 10 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 5 பேர் பஞ்சார் மருத்துவமனையிலும் 5 பேர் குல்லுவில் உள்ள மண்டல மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறினார். முன்னதாக, கனமழை காரணமாக டிரையண்ட் மலைப்பகுதியில் சிக்கித் தவித்த 83 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தரம்சாலாவின் துணை மண்டல மாஜிஸ்திரேட் (எஸ்டிஎம்) தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, மதியம் 1.30 மணியளவில் 11 பேர் டிரையண்டில் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்தது.

மாலை 5 மணியளவில், மாநில பேரிடர் மீட்புக் குழு அங்கு சென்றடைந்தது. அங்கு சென்ற மீட்புக்குழு மேலும் 72 பேர் அங்கு சிக்கியிருப்பதாக தகவல் தெரிவித்தது. தொடர்ந்து அந்த 11 பேர் உட்பட 83 பேரையும் மீட்புக் குழு பத்திரமாக மீட்டனர். வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அவர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.