இராமேசுவரம்,திருவண்ணாமலை,மதுரை கோயிலில் நாள் முழுதும் அன்னதானம்..

Published:

images 21 2 - 2026

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இராமேசுவரம் – அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை- அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், மதுரை – அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைக் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இறையருள் பெறத் திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத் திட்டமாகும். தற்போது இத்திட்டத்தில் 754 திருக்கோயில்களில் மதியவேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.

அத்திட்டத்தினை விரிவுப்படுத்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 16.09.2021 அன்று திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

2022 – 23 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, “நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே ஐந்து திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது. இத்திட்டமானது தற்போது விரிவுபடுத்தப்பட்டு இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் மற்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்”  என அறிவிக்கப்பட்டது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

அதன்படி மேற்குறிப்பிட்ட மூன்று திருக்கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை அன்னதானம் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் இம்மூன்று திருக்கோயில்களில் நாளொன்றுக்கு சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் அன்னதானம் பெற்று பயனடைவார்கள்.

திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் உணவு தர பாதுகாப்புச் சான்றிதழ் அனைத்து முதுநிலை திருக்கோயில்கள் உட்பட 314 திருக்கோயில்களுக்கு பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு,  சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

காணொலிக் காட்சி வாயிலாக மதுரையிலிருந்து வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் எம். பூமிநாதன், ஏ. வெங்கடேசன், மதுரை மாநகராட்சி மேயர்
வி. இந்திராணி பொன்வசந்த், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும், திருவண்ணாமலையிலிருந்து சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும், இராமேசுவரத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.  

mcms 3 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img