ஐ.பி.எல் 2023 – ஒன்பதாம் நாள் – 08.04.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஐ.பி.எல் 2023 தொடரின் ஒன்பதாம் நாளான நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் கௌஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே நடந்தது. இரண்டாவது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை அணிக்கும் சென்னை அணிக்கும் இடையே நடந்தது.
ராஜஸ்தான் vs டெல்லி
ராஜஸ்தான் அணி (199/4, புட்லெர் 79, ஜெய்ஸ்வால் 60, முகேஷ் 2/36) டெல்லி அணியை (142/9, வார்னர் 65, சாஹல் 3/27, போல்ட் 3/29) 57 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது.
இரண்டு அணிகளும் விளையாடிய முதல் ஓவர் மொத்த ஆட்டத்தின் கதையையும் சொல்லும். ராஜஸ்தான் அணி விளையாடிய, கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் ஐந்து ஃபோர் அடித்தார்; ஸ்கோர் 20/0. டெல்லி அணி விளையாடிய போல்ட் வீசிய முதல் ஓவரில் ப்ருத்வி ஷா, மனீஷ் பாண்டே இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார்; ஸ்கோர் 0/2; இதுதான் இரு அணிகளும் இன்று ஆடிய ஆட்டத்தில் இருந்த வித்தியாசம்.
ராஜஸ்தான் அணியின் முதல் விக்கட் (யஷஸ்வி ஜெய்ஸ்வால், 31 பந்துகள், 60 ரன்) 8.3ஆவது ஓவரில் விழுந்தபோது அணியின் ஸ்கோர் 98. அதன் பின்னர் சஞ்சு சாம்சன் ரன் எதுவும் எடுக்காமலும் பராக் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனால் ரன் ரேட் குறைந்தது.
அதன் பிறகு ஆடவந்த ஹெட்மேயர் 21 பந்துகளில் 39 ரன் அடித்தார். 18.3 ஓவரில் ஆட்டமிழந்த பட்லர் 79 ரன்கள் அடித்தார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கட் இழப்பிற்கு 19 ரன் எடுத்திருந்தது.
அதன் பிறகு ஆடவந்த டெல்லி அணியில் இரட்டை இலக்க ரன்கள் எடுத்தவர்கள் மூவர்; வார்னர் 65 ரன்; ரோஸ்ஸோ 14; லலித் யாதவ் 38. மற்ற வீரர்கள் எவரும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. ப்ருத்வி ஷா என்ன ஒரு அருமையான வீரர். மூன்று ஆட்டங்களாக மிகவும் சொதப்புகிறார். மேசமான ஆட்டத்தால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 142 ரன் கள் மட்டுமே எடுத்தது. எனவே 57 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது. ஆட்ட நாயகனாக ஜெய்ஸ்வால் அறிவிக்கப்பட்டார்.
மும்பை vs சென்னை
மும்பை அணியை (157/8, இஷான் கிஷன் 32, ஜதேஜா 3/20, சாண்ட்னர் 2/28, தேஷ்பாண்டே 2/31) சென்னை அணியிடம் (18.1 ஓவரில் 159/3, ரஹானே61, கெய்க்வாட் 40*, கார்த்திகேயா 1/24) 7 விக்கட் வித்தியாசத்தில் தோற்றது.
சென்னை அணியில் தீபக் சாஹார் முதல் ஓவர் வீசிய பின்னர் காயத்தால் அதற்கு மேல் ஆடவில்லை. முன்னதாக மொயின் அலி காய்ச்சல் காரணமாகவும் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாகவும் ஆடவில்லை.
இருப்பினும் சுழல் பந்துவீச்சாளர்களான ஜதேஜா, சாண்ட்னர் சிறப்பாக பந்துவீசியதால் மும்பை அணி நிலைகுலந்தது. சென்னை அணியில் விளையாடும் மும்பையைச் சேர்ந்த துஷார் தேஷ்பாண்டே இரண்டு விக்கட்டுகள் எடுத்தார்.
அதேபோல மும்பையைச் சேர்ந்த அஜிங்க்யா ரஹானே இன்று அதிரடியாக ஆடினார்; 19 பந்துகளில் அரைச் சதம் மற்றும் 27 பந்துகளில் 61 ரன். ரஹானேயின் ஆட்டத்தை வேடிக்கை பார்த்த கெய்க்வாட் தன் பங்கிற்கு ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்தார்.
ரோஹித் ஷர்மா உட்பட மும்பை அணியின் பேட்டர்கள் இந்த ஐபிஎல்லில் இதுவரை சரியாகவே ஆடவில்லை. இனியாவது சுதாரிப்பார்களா பார்க்கவேண்டும். பந்துவீச்சும் மிகவும் சுமாராக உள்ளது.
மும்பை, டெல்லி, ஹைதராபாத் மூன்று அணிகளும் வெற்றிக் கணக்கைத் தொடங்காமல் உள்ளன. ராஜஸ்தான் அணி 4 புள்ளிகளுடன், சிறப்பான ரன்ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது.