train truck struck in sengottai - 2026

செங்கோட்டை அருகே… ரயில் விபத்தைத் தவிர்த்த முதியோருக்கு குவியும் பாராட்டு!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
train truck struck in sengottai - 2026

செங்கோட்டையை அடுத்த பகவதிபுரம் அருகில், தங்கள் வீட்டில் நள்ளிரவு 12.50 மணி அளவில் தூங்கும் போது பெரிய சப்தம் கேட்டு வெளியே வந்த சண்முகையா குருந்தம்மாள் தம்பதியினர், ஒரு சரக்கு வாகனம் 18 அடி உயரத்தில் இருந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்து கிடப்பதைக் கண்டு பதறி, தொலைவில் ரயில் வண்டி வரும் சப்தம் கேட்டு சுதாரித்து, தம் கையில் இருந்த டார்ச் லைட்டை அடித்தவாறு தண்டவாளத்தில் ரயில் வரும் திசையில் ஓடி ரயிலை நிறுத்தினர். இவர்களது சமூக பொறுப்புணர்வினால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. அவர்களைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு பிளைவுட் ஏற்றிவந்த லாரி ஒன்று, செங்கோட்டை – கொல்லம் ரயில் பாதையில் தமிழக கேரள எல்லையான எஸ் வளைவு பகுதியில், 20 அடி உயரத்தில் உள்ள சாலையில் இருந்து ரயில் தண்டவாளப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நள்ளிரவு நேரம் என்பதால், திடீரென எழுந்த பயங்கர சத்தத்தைக் கேட்டு, தங்கள் வீட்டில் உறங்கச் சென்ற முதிய தம்பதியான சண்முகையா, குந்தம்மாள் தம்பதி உள்ளிட்ட மூவர் விரைந்து வந்து வெளியே பார்த்தனர்.

இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அப்போது லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது தெரிந்தது. அந்த நேரம், கேரளாவின் ஆற்றிங்கல் பகவதி அம்மன் கோவில் நிகழ்ச்சிக்காக பயணிகளின்றி பாலருவி சிறப்பு ரயில் அந்த வழித் தடத்தில் வந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட அந்த வயதான தம்பதியர், ரயிலை நிறுத்துவதற்காக தண்டவாளத்தில் ரயிலை நோக்கி ஓடிச் சென்றனர். பின்னர், தங்கள் கைகளில் இருந்த டார்ச் லைட்டை அடித்து, அந்த ரயிலை நிறுத்துவதற்கு சமிக்ஞை கொடுத்தனர். மலைப் பாதையில் ரயில் அதிகபட்சமாக 30 கி.மீ. வேகத்தில் தான் செல்லும் என்பதால், ரயிலின் லோகோ பைலட் உடனடியாக அந்த ரயிலை நிறுத்தினார். இதனால், அந்தப் பாதையில் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

விபத்து காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் ரயில், செங்கோட்டையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. 3 மணி நேர கால தாமதத்திற்கு பின் ரயில் கொல்லம் புறப்பட்டுச் சென்றது. மேலும் சில ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ரயில் போக்குவரத்து பின்னர் சீரானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.