
திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் இந்துக்கள் மனது புண்படும்படி நடந்து கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், பூர்ண சந்திரன் இறப்புக்கு நீதி வழங்கும் வகையில் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றாததால் மனம் விரக்தியிலும் தமிழக அரசின் நிலைப்பாட்டிலும் மனம் வேதனையடைந்த மதுரையைச் சேர்ந்த பூரணச்சந்திரன் என்பவர் தீக்குளித்து மரணம் அடைந்துள்ளார்.
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டு வந்தது. சமீபத்தில் சில ஆண்டுகளாக பழமையான வழக்கம் மாற்றப்பட்டு மோட்க்ஷ தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் பழங்காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்த மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் அடிப்படையில் நீதிமன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், அது இந்துக்களின் உரிமை மற்றும் வழிபாட்டு உரிமையை மாற்றக்கூடாது என்றும், அது முருகப்பெருமானுக்கு சொந்தமான இடம் என்றும் அதில் தீபமேற்றி அதற்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற தீர்ப்பில் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நூறு வருடங்களாக ஏற்றப்படாமல் இருந்த கார்த்திகை தீபம் மலை உச்சியில் ஏற்றப்படும் என்ற எதிர்ப்பார்ப்போடு மகிழ்ச்சியிலும் இருந்தார்கள்.
ஆனால் தமிழக திமுக அரசு இந்து விரோத மனப்பான்மையுடன் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றவில்லை. மனுதாரர்கள் மத்திய அரசு பாதுகாப்பு படையுடன் தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னரும் தீபம் ஏற்ற சென்ற மனுதாரர்களையும் தீபம் ஏற்ற விடாமல் தடுத்தது.
இந்த செயலால் தமிழகத்தில் முருகன் மீது அளப்பரிய பக்தியை கொண்ட மக்களுக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது.
இது மட்டும் இல்லாமல் நீதிமன்றத்தில் அரசு தரப்பிலும் இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை தரப்பிலும் இந்து விரோத மனப்பான்மையில் தன் வாதத்தை எடுத்து வைத்தார்கள்.
அது தீபத்தூண் அல்ல சர்வே கல் என்றும், அது தர்காவுக்கு சொந்தமானது என்றும் பல்வேறு வகையான இந்து விரோத இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையிலான வாதங்களை முன் வைத்தனர்.
இதனால் முருக பக்தர்கள் பலர் மிகுந்த மன வேதனையிலும் விரக்தியிலும் இருந்து வந்தனர்.
இந்நிலையில் இன்று மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ண சந்திரன் என்ற முருக பக்தர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபம் ஏற்றாமல் தவறான முடிவை எடுத்து இந்துக்களுக்கு விரோதமாக தீபம் ஏற்றவில்லை என்ற மன வேதனையிலும், மன விரக்தியிலும் அடுத்த வருடம் தீபம் ஏற்ற வேண்டும் என்ற வலியுறுத்தியும் தீக்குளித்து இறந்துள்ளார்.
அனைத்து மதத்தினரின் உணர்வுகளையும் பக்தியையும் காப்பாற்றி அவர்களுக்கான உரிமையை பெற்று தர வேண்டிய அரசே, இந்து மதத்திற்கு எதிராக இருந்து இந்துக்களின் உரிமைக்கு எதிராகவும் இழிவுபடுத்தும் வகையிலும் செயல்படுவது என்பது கண்டிக்கத்தக்க விஷயமாகும்.
இவ்வாறான இந்த செயலால் மனம் வேதனை அடைந்து தன்னைத்தானே தீக்குளித்து இறந்த பூர்ண சந்திரன் அவர்களின் இறப்பிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
ஆன்மீக பூமியான தமிழகத்தில் இந்துக்களின் உரிமையை நிலைநாட்ட முடியவில்லை என்ற விரக்தியில் ஒரு இந்து தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டு அழித்துக் கொள்ளும் நிலையில் தமிழகம் இருக்கிறது.
இந்துக்களுக்கு துரோகம் விளைவித்து அதன் காரணமாக மன வேதனையிலும் மனவிரக்தியிலும் இறந்த மதுரையைச் சார்ந்த பூர்ண சந்திரன் இறப்புக்கு நீதி வழங்கும் வகையில் தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதவி விலக வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்துகிறது…
பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்றம் உத்திரவிட்டும் கார்த்திகை தீபம் ஏற்றுவதை தடுக்கும் முகஸ்டாலின் அரசை கண்டித்து தீக்குளித்து இன்னுயிர் நீத்த பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்டு நெல்லைக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு #கருப்புக்கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் டாக்டர் அரசுராஜா தலைமையில் 21/12/2025 ஞாயிறு காலை 10 மணிக்கு நெல்லை ஹைகிரவுண்ட் மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, நெல்லை மாநகர் இந்து முன்னணி தெரிவித்துள்ளது.




