
பகவத் கீதை: தொடர் பகுதி 1
முனவர் கு.வை. பால சுப்பிரமணியன்
பகவத்கீதை பற்றி எழுத வேண்டும்; வீடியோ வெளியிடவேண்டும் என எனக்கு ஒரு நீண்டநாள் ஆசை. 2016ஆம் ஆண்டு மதிமுகம் தொலைக்காட்சியில் பகவத்கீதை பற்றிப் பேச ஒரு அழைப்பு வந்தது. என்னுடைய ஆசிரியர் முனைவர் முகிலை இராசபாண்டியன் மூலமாக வந்த அழைப்பு அது.
மதிமுகம் தொலைக்காட்சியில் ஒரு திருக்குறள், பைபிளில் இருந்து ஒரு வசனம், குரான் கருத்துக்கள் என காலை நேரத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அதில் பகவத்கீதை பற்றிப் பேச என்னை அழைத்தார்கள். நான் அதற்கு முழுமையாகத் தயாராகவில்லை. இருப்பினும் எட்டு நாட்களுக்குத் தேவையான வீடியோக்களைப் பதிவு செய்துவிட்டு வந்தேன். அவர்களும் அவற்றை 2017இல் ஒளிபரப்பினார்கள். ஆனால் அதன் பிறகு அவர்களும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை; நானும் அவர்களைத் தொடர்பு கொள்ளவில்லை.
பின்னர் ஸ்ரீடிவியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மகாபாரதம் பற்றி ஒரு மணி நேர சொற்பொழிவுகளாக 10 சொற்பொழிவுகள் ஆற்ற நான் வாய்ப்பு கேட்டிருந்தேன். அவர்கள் தினமும் 10 நிமிடங்களாக எத்தனை நாள்கள் வேண்டுமென்றாலும் நீங்கள் நிகழ்ச்சி நடத்தலாம். பின்னர் அது ஐந்து நிமிடமாகக் குறைக்கப்பட்டது. நானும் ஒரு 15 எபிசோடுகள் வீடியோ பதிவு செய்து கொடுத்தேன். அவர்கள் ஒளிப்பரப்பினார்களா எனத் தெரியவில்லை. அதன் பின்னர் நானும் அவர்களை தொடர்பு கொள்வதை விட்டுவிட்டேன்.
இதனை வீடியோவாகக் கொண்டுவரலாம் என நினைத்தேன். எனக்கே பாலாவின் குரல் என்ற யூட்யூப் சேனல் இருக்கிறது. ஆனால் வீடியோக்கள் தயார் செய்வதில் நிறைய நேரம் செலவானது.
சிலப்பதிகாரம் பற்றி ஒரு வீடியோத் தொடர் தயாரித்து அது 10 வீடியோக்களுடன் நிற்கிறது. வீடியோ எடிட்டிங்கிற்காக யாரையாவது பணிக்கமர்த்தலாம் என்றால் அதற்கு பணச் செலவாகிறது. வீடியோ போடுவதை என் மகள் நோய் வாய்ப்பட்டிருந்த போது அவளை உற்சாகப் படுத்துவதற்காகச் செய்தது. அவள் குணமடைந்து விட்டாள். அவளுக்கென்று யூட்யூப் சேனல். இன்ஸ்டாகிராம் எல்லாம் இருக்கிறது. திருமணமாகிச் சென்று விட்டாள். எனவே அவள் வேலையைச் செய்வதற்கே அவளுக்கு நேரம் போதவில்லை. எனவே வீடியோ எண்ணம் கைவிடப்பட்டது.
இருந்தாலும் ஆசை அரித்துகொண்டிருந்தது. கம்பர் இராமாயணம் எழுதும் முன்னர் சொன்னதுபோல
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன் – மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ!
நானும் பகவத் கீதை பற்றி எழுதலாம் என முடிவு செய்தேன். இதற்குச் சில காரணங்கள் உள்ளன.
(1) எழுதுவது கைவந்த கலை. யாருடைய உதவியும் தேவையில்லை. ஒரு பத்து பகுதிகள் எழுதிய பின்னர் முகநூலிலோ, அல்லது நண்பர் திரு செங்கோட்டை ஸ்ரீராம் மனது வைத்தால் தினசரி மின் நாளிதழிலோ எழுதலாம் என நினைத்தேன். செங்கோட்டை ஸ்ரீராம் தினசரியில் எழுத ஒப்புதல் தந்துவிட்டார். அவருக்கு என் நன்றி. இதோ தொடங்கி விட்டேன். எல்லாம் வல்ல அந்த கண்ணபிரான் எனக்கு அருள் செய்யவேண்டும்.
பகவத்கீதை பற்றி நான் நினைப்பவற்றையெல்லாம் எழுத எனக்கு நீண்ட ஆரோக்கியமும் ஆயுளும் சூழலையும் அருளவேண்டும் என வேண்டிக்கொண்டு, எழுதத் தொடங்குகிறேன்.
முதலில் முன்னுரையாகச் சில கட்டுரைகள். பின்னர் மகாபாரதம் பற்றிய கட்டுரைகள். அதன் பின்னர் பகவத் கீதை எனத் திட்டமிட்டிருக்கிறேன். நண்பர்கள் அனைவரும் என்னை இக்காரியத்தில் வெற்றிபெற வேண்டுமென ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.



