
மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில், இருப்பதால் மலைமீது செல்லவோ எந்த நிகழ்வும் நடத்தவோ அனுமதிக்க கூடாது என இந்து அமைப்புகள் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு நாட்களில் மலை மீது தர்கா சார்பாக சந்தனக்கூடு நிகழ்வு நடைபபெறும் நிலையில் மீண்டும் எழும் சர்ச்சைகள் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் சந்தனக்கூடு மற்றும் கல்லத்தி மரம் தொடர்பாக புகார் மனு அளித்துள்ளனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பாலமுருகன் மற்றும் சோலை கண்ணன் கூறுகையில்:
திருப்பரங்குன்றம் மலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் தர்கா சார்பாக சந்தனக்கூடு நிகழ்வின்போது கொடியேற்றப் படுவதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடி ஏற்றி வந்த நிலையில் சகோதரத்துவ நல்லெண்ணத்தில் தாங்கள் அனுமதித்ததாகவும் தற்போது நூறாண்டு காலமாக இந்த மலை பிரச்சனை நடைபெற்று வருகிறது.
மேலும், மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளதால் மலை மீது யாருக்கும் அனுமதி இல்லை என்று மறுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வருகின்ற 21ஆம் தேதி சந்தனக்கூடு விழாவின்போது, மலை மீது கொடியேற்றவோ வேறு எந்த நிகழ்ச்சியும் நடத்தவோ அனுமதிக்க கூடாது என்றும்,
மேலும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் தர்கா சார்பாக முன்பு ஏற்றப்பட்டுள்ள பழைய கொடியை அகற்ற வேண்டும் என்றும், அதை மீறி அவர்களுக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் எங்களுக்கு மலை மீது தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஏற்கனவே சமணர் படுகைகள் பகுதியில் தர்கா நிர்வாகிகள் தான் பச்சை நிற பெயிண்டை ஊற்றினர் . இந்த நிலையில் கொடியேற்ற அனுமதித்தால், கோயிலுக்கு சொந்தமான இடத்தையும் அனுபவ பாத்தியம் என்கிற பெயரில் ஆக்கிரமிக்க முயல்வார்கள் என்பதால் மலை மீது சந்தனக்கூடு நிகழ்ச்சிக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என்றும், அப்படி அனுமதிக்கும் பட்சத்தில் இந்துக்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது சந்தனக்கூடு தொடர்பாக திருப்பரங்குன்றம் பகுதியில் புகார் மனுக்கள் வந்துள்ளதால், திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது .



