
ஹனுமத் ஜயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் இன்று காலை தங்கக் கவசம் சார்த்தி ஒரு லட்சத்து எட்டு வடை மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். கடந்த ஒரு வார காலமாக தயார் செய்யப்பட்ட வடைகள் மாலைகளாகக் கோக்கப்பட்டு இன்று காலை ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க மலைக்கோட்டை. இங்கே நாமகிரி தாயார் உடனாய நரசிம்மர் ஆலயம் குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் 18 அடி உயரத்தில் ஒற்றைக் கல்லினால் ஆன பிரம்மாண்ட ஆஞ்சநேயர் கோயில் தனிக் கோயிலாக அமைந்திருக்கிறது.
இங்கே ஆஞ்சநேயர் இடுப்பில் வாளுடனும், சாளக்கிராம மாலையுடனும் காட்சியளிக்கிறார். சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் என கருதப்படும் இங்கே கூரையோ, கோபுரமோ இன்றி வெட்டவெளியில் நின்ற கோலத்தில் வீற்றிருக்கிறார் ஆஞ்சநேயர்.
அனுமத் ஜயந்தியான இன்று, இந்த கோயிலில் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனுமத் ஜயந்தி விழாவின் முக்கிய நிகழ்வாக, இங்கே 1,00,008 வடைகள் கொண்ட பிரம்மாண்ட மாலை ஆஞ்சநேயருக்கு அனுபவிக்கப்படும். இதை தரிசிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு இன்று வருகிறார்கள்.

முன்னதாக இந்த வடை மாலையை தயாரிக்கும் பணியில் திருவரங்கத்தை சேர்ந்த சுமார் 40 சமையல் கலைஞர்கள் கடந்த ஒரு வார காலமாக ஈடுபட்டிருந்தனர். இதற்காக ஒரு லட்சத்துக்கு எட்டு வடைகளைத் தயாரித்து, மாலையாக கோக்கும் பணி நிறைவடைந்தது. இந்த வடை தயாரிக்க, 2.5 டன் உளுத்தம் பருப்பு, 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 125 கிலோ உப்பு மற்றும் 700 லிட்டர் சுத்தமான நல்லெண்ணெய் பயன்படுத்தப்பட்டது. ஒரு சொட்டு நீர் கூட சேர்க்காமல் உளுந்த மாவு பிசைந்து, எண்ணெயில் பொரித்து எடுக்கப்பட்டது. இதனால் வடைகள் கெட்டுப் போகாமல், நீண்ட காலத்துக்கு அதன் மொறுமொறுப்பும் சுவையும் குறையாமல் இருக்கும். சாதாரண நாட்களில் பக்தர்களின் வேண்டுதலுக்காக 2,000 வடைகள் கொண்ட மாலைகள் சாற்றப்படுகின்றன. இன்று அனுமத் ஜயந்தி சிறப்பு என்பதால் பக்தர்களின் பங்கேற்பில் இந்த ஒரு லட்சத்து எட்டு வடைகளால் ஆன மாலை தயாரிக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் இதற்காக ஸ்ரீரங்கத்தில் இருந்து ஒரு குழு வந்து தயாரிக்கிறது குறிப்பிடத் தக்கது.
அனுமன் ஜயந்தியான இன்று காலை 5 மணி அளவில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டது. இந்த மாலை இன்று மதியம் வரை ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்டிருக்கும். சுவாமிக்குச் சாற்றப்பட்ட ஒரு லட்சத்து எட்டு வடைகளும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படும். பின்னர் மதியம் 1 மணி அளவில் வடை மாலை களையப்பட்டு, ஆஞ்சநேயருக்கு வாசனைத் திரவியங்களால் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
அனுமனின் அவதாரத் திருநாளான இன்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும் பிரசாதமாக வடையைப் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் பலர் ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்தனர்.




