லஞ்ச வீடியோ வெளியாகி நெருக்கடி: பிஹார் அமைச்சர் குஷ்வாஹா ராஜினாமா

Published:

பாட்னா:

பிஹாரில் மாநில அமைச்சர் அவதேஷ் குமார் குஷ்வாகாவும் லாலு கட்சியின் வேட்பாளர் முத்ரிகா யாதவும் லஞ்சம் வாங்கியது தொடர்பான வீடியோ வெளியானதையடுத்து, தனது அமைச்சர் பதவியை குஷ்வாகா ராஜினாமா செய்தார்.

ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவரான குஷ்வாகா, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ளார். கிழக்கு சம்பரன் மாவட்டம், பிப்ரா தொகுதியில் போட்டியிடும் இவர், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் பெறும் ரகசிய வீடியோ நேற்று முன்தினம் வெளியானது.  தொடர்ந்து, ஜெகனாபாத் தொகுதியில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் முத்ரிகா யாதவ் லஞ்சம் வாங்குவது போன்ற மற்றொரு வீடியோவும் வெளியானது.

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் வசிஷ்ட நாராயண் சிங் ஆகியோர், இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில், குஷ்வாகாவை பதவி விலகுமாறு கேட்டுக் கொள்வதாகவும், பிப்ரா தொகுதியின் வேட்பாளரை மாற்றுவது என்றும் முடிவு எடுத்ததாகத் தெரிகிறது.

இந்தத் தகவல் வெளியானதும், குஷ்வாகா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ஆளுநரின் ஒப்புதலுக்காக நிதிஷ் குமார் அனுப்பியுள்ளார்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

இந்நிலையில் தன் மீதான லஞ்சக் குற்றச்சாட்டை குஷ்வாகா மறுத்துள்ளார். “என் மீது லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்ததால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். அரசியல் எதிரிகள் எனக்கு எதிராக சதித் திட்டம் தீட்டி உள்ளனர். எனினும், மக்களின் முன்பு இதுதொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வருவேன்” என்று அவர் கூறியுள்ளார்.

லஞ்ச வீடியோ விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆர்.லட்சுமணன், “அமைச்சரும், மற்றொரு வேட்பாளரும் லஞ்சம் வாங்கியது தொடர்பான வீடியோவுடன் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளோம். அறிக்கை கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பிஹார் பேரவைக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியான இந்த வீடியோவால், நிதிஷ் குமார் தலைமையிலான மெகா கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img