பொது சேவை மையங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும்:ஆட்சியர்

சற்றுமுன்

பொது-இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பட்டா மாறுதல் பெற்றுக்கொள்ளும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆட்சியர் கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.
இதில் ஆட்சியர் பேசியது: மாவட்ட மின் ஆளுமை திட்டத்தின் கீழ் பட்டா மாறுதல் மற்றும் நில உட்பிரிவு செய்தல் ஆகிய பணிகளுக்கான மனுக்களை பொது இ-சேவை மையம் வழியாக இணைய தளத்தில் எளிதாக பதிவு செய்து கொள்ளும் வசதி இன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கு அரசு நிர்வாகங்களைத் தேடி அலைந்து கொண்டிருந்த சூழ்நிலையினை மாற்றும் விதமாக தற்போது மக்களைத் தேடி நிர்வாகம் என்ற அடிப்படையில் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 5 வகையான சான்றிதழ்களை இணைய தளம் வழி சேவை மூலம் எளிதில் பெற்றுக்கொள்ளும்முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, பொதுமக்களுக்கு தேவையான பட்டா மாறுதலுக்கு தேவையான மனு செய்வது முதல் அதற்குரிய மாறுதல் உத்தரவு பெறும் வரை அனைத்துப் பணிகளும் இனி இணையதளம் வழியாகவே செயல்படுத்தப்படும். இதற்காக அம்பாசமுத்திரம் வட்டம், முன்னோடி வட்டமாக தேர்வு செய்யப்பட்டு இதுவரை இணையதளம் மூலமாக பெறப்பட்ட 761 உட்பிரிவு அல்லாத மனுக்களுக்கும், 61 உட்பிரிவு மனுக்களுக்கும் உரிய உத்தரவுகள் இணைய தளம் வழியாகவே அனுப்பப்பட்டுள்ளன.

ஆகவே, நமது மாவட்டத்தில் பாளையங்கோட்டை வட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள் தங்கள் இடத்தில் பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவு செய்தல் ஆகிய பணிகளுக்கு பாளையங்கோட்டை வட்டத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் 19 பொது இ-சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் தேவையின்றி பல்வேறு அலுவலகங்களைத் தேடி வீணாக அலைவதைத் தவிர்த்து, இணையதள சேவையினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.