தமிழக ஆளுநர் உரை…! வழக்கம்போல் அவையிலிருந்து வெளியேறிய ஸ்டாலின்!

சற்றுமுன் தமிழகம்
stalin out assembly2 - 2026

சென்னை: தமிழக சட்டமன்றம் இன்று காலை கூடியது. முதல் நிகழ்வாக, ஆளுநர் தனது உரையைத் துவங்கினார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச வேண்டும் என்று கூறிய எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின், தொடர்ந்து பேச முயன்றார். பின்னர் பேசுங்கள் என ஆளுநர் கூறினார். ஆனால், கஜா புயல் மறுசீரமைப்பு பணிகளுக்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை எனக் கூறி, ஆளுநர் உரையை புறக்கணித்து வெளியேறுவதாகக் கூறி, வழக்கம்போல், சட்டமன்ற புறக்கணிப்பை ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் மேற்கொண்டனர்.

அவைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசிய ஸ்டாலின், தமிழக அரசு பல்வேறு விஷயங்களில் தோல்வியடைந்துள்ளது. கஜா புயலுக்கு மத்திய அரசு 1,500 கோடி ரூபாய் கூட வழங்கவில்லை. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை திரும்ப பெற வேண்டும் என்று அழுத்தம் தர இயலாத நிலையில் மாநில அரசு உள்ளது.

அரசு மருத்துவமனையில் எச்ஐவி ரத்தத்தை செலுத்தி மோசமான சூழ்நிலையை அரசு ஏற்படுத்தியது, விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி போராட்டம் நடத்தப் படுகிறது. அவர்களுடன் பேச வக்கற்ற நிலையில் அரசு உள்ளது.

stalin int - 2026

குட்கா புகழ் விஜயபாஸ்கருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டில் ரெய்டு நடந்துள்ளது. வருமான வரித்துறை விசாரணை நடந்துள்ளது. அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால், பதவியில் நீடிப்பது வெட்கக்கேடானது.

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார் போடப்படுகிறது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என அமைச்சர் சண்முகம் பகிரங்கமாக பேட்டி கொடுத்துள்ளார். இதனால் தான், அவர் இறந்த உடன் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்றோம். அதனை தற்போது வலியறுத்தியுள்ளோம்.

அரசு எழுதி கொடுத்துள்ள பேப்பரை ஆளுநர் படிக்கிறார். இதனைக் கண்டித்து அவரது உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார் ஸ்டாலின்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.