ஐபிஎல்.,12 கோலாகல ஆரம்பம்! முதல் போட்டியில் சென்னை அசத்தல் வெற்றி!

Published:

CSK - 2026

சென்னை, பெங்களூரு அணிகள் மோதிய 12ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று இரவு நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் உற்சாகத்துக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது.

12ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொண்டது.

மகேந்திரசிங் தோனி தலைமையிலான அணியும், விராட் கோலி தலைமையிலான அணியும் மோதிய முதல் போட்டி என்பதால், ஐ.பி.எல். தொடக்கமே அட்டகாசமாக அமைந்தது.

இந்தப் போட்டியைக் காண பிற்பகல் முதலே மைதானத்திற்கு ரசிகர்கள் வரத் தொடங்கி விட்டனர். இதை ஒட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 5.15 மணி முதல் ரசிகர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தீவிர சோதனைகளுக்குப் பின்னரே அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த மைதானத்தில் கடைசியாக நடந்த 13 போட்டிகளில் சென்னை அணி 12இல் வென்றுள்ளது. பெங்களூருவுக்கு எதிராக இங்கு நடந்த போட்டிகளிலும் 85 விழுக்காடு வெற்றியை சென்னை அணி பதிவு செய்துள்ளது. இதனால் இன்றைய போட்டியை வெற்றிக் கணக்குடன் சென்னை அணி தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதை சென்னை அணி நிறைவேற்றியது.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

புல்வாமா தாக்குதல் காரணமாக வழக்கமாக நடக்கும் தொடக்க நிகழ்ச்சி இந்த முறை நடைபெறாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. எனவே, தொடக்க நிகழ்ச்சிக்கு செலவாகும் தொகை, புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. அதன்படி போட்டி தொடங்கும் முன் இராணுவ அதிகாரிகளிடம் அத்தொகை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை அடுத்து முதல் போட்டி தொடங்கியது. சென்னை அணி டாஸ் வென்று பந்து வீசத் தீர்மானித்தது.

இதை அடுத்து பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரராகக் களம் கண்ட விராட் கோலி, பார்திவ் படேல் ஜோடியை ஹர்பஜன் சிங் பிரித்தார். விராட் கோலி 12 பந்துகள் எதிர்கொண்டு 6ரன் எடுத்திருந்த நிலையில் ஹர்பஜன் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். முதல் மூன்று விக்கெட்டை ஹர்பஜன் சிங் வீழ்த்தினார். அதில் இருந்து அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன.

பார்த்திவ் படேல் மட்டுமே 35 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 26 ரன் குவித்தார். மற்ற வீரர்கள் எவருமே ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

சென்னை அணி தரப்பில் 4 ஓவர் வீசிய ஹர்பஜன் 3 விக்கெட் வீழ்த்தினார். இம்ரான் தஹிர் 3, ஜடேஜா 2, ப்ராவோ 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதை அடுத்து பெங்களூர் அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 70 ரன் எடுத்தது. 71 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி, தொடக்கம் முதலே நிதானத்துடன் விளையாடியது.

சென்னை அணியில் துவக்க வீரர் ஷேன் வாட்ஸன் 10 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து சுரேஷ் ரெய்னா 21 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 19 ரன் எடுத்தார். அம்பத்தி ராயுடு 42 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 28 ரன் எடுத்தார். ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 6 ரன்னும் கேதர் ஜாதவ் ஆட்டம் இழக்காமல் 13 ரன்னும் எடுத்தனர். இதை அடுத்து, சென்னை அணி 17.4 ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img