சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் நாணயக் குவியலுடன் வேல் வைத்து பூஜை!

அடடே... அப்படியா? ஆன்மிகச் செய்திகள் உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

Sivanmalai Andavar Utharavu Petti - 2026

காங்கயம்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், நாணயகுவியலுடன் ஐம்பொன்வேல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ள சிவன்மலையில் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கே, பின்னர் நடக்க இருப்பதை முன் கூட்டியே உணர்த்தும் விதமாக ஆண்டவர் உத்தரவுப் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெட்டி மிகவும் புகழ்பெற்றதாகத் திகழ்கிறது.

சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, தனக்கு இன்ன பொருளை வைத்து பூஜை செய்யுமாறு கூறுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோயில் நிர்வாகத்தை அணுகி தமது கனவில் உத்தரவான பொருளைக் கூறுவார். கோயில் நிர்வாகத்தில் பூ வைத்து சாமியிடம் உத்தரவு கேட்கப்பட்டு உத்தரவானதும், குறிப்பிட்ட பொருள் ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்படும். இது காலாகாலமாக நடைபெற்று வரும் பழக்கமாக உள்ளது.

இதுபோல் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் என்று எதுவும் இல்லாமல், இன்னொரு பக்தரின் கனவில் வந்து மற்றொரு பொருளை சுட்டிக் காட்டும் வரையில், பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை இதுவரையிலும் ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடந்த 5ஆம் தேதி முதல் வெள்ளியால் செய்யப்பட்ட வேல் வைத்து பூஜை செய்யப் பட்டு வந்தது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், முத்தூர் வேலம்பாளையம் கோகுல்ராஜ் என்பவரின் கனவில் நாணயக் குவியலுடன் ஐம்பொன்வேல் உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் நாணயக் குவியலுடன் ஐம்பொன்வேல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இதுகுறித்து கோயில் அர்ச்சகர் கூறுகையில், ‘‘உத்தரவுப் பெட்டியில் நாணயக் குவியலுடன் ஐம்பொன்வேல் வைக்கப்பட்டுள்ளது. முருகனிடம் உள்ள வேல் அதர்மத்தையும், தீமையும் அழிக்கும் சக்தி கொண்டது. அதிகார பலத்தால் தவறான விஷயங்களைச் செய்பவர்களை அழிப்பார்கள். தேர்தல் நடைபெறும் நேரத்தில் நாணயம் வைக்கப்பட்டுள்ளது. இது எதன் அடையாளம் என்பது போகப் போகத் தான் தெரியும்’’ என்றார்.

இந்தியா பொருளாதார வலிமையுடன் உலக அரங்கில் கொடிகட்டிப் பறக்க வேண்டும்; நாட்டில் அனைவரும் பொருளாதார வளமையுடன் திகழவேண்டும் என்று மக்கள் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், இத்தகைய உத்தரவு வந்துள்ளது தேர்தலிலும் எதிரொலிக்குமா என்று பக்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.