2ஜி ஊழல் பணம் அளவுக்கு சொத்து..! அதிரவைத்த வேட்பாளர்! விழிபிதுங்கும் தேர்தல் ஆணையம்!

Published:

affidavit1 - 20262ஜி ஊழல் பணம் அளவுக்கு சொத்து..! அதிரவைத்த வேட்பாளர்! விழிபிதுங்கும் தேர்தல் ஆணையம்!

கடந்த இரு தினங்களாக, தமிழக ஊடகங்கள் மட்டுமல்லாமல், தேசிய ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியவர், சுதந்திரப் போராட்ட வீரர் நெல்லை ஜெபமணியின் மகன் மோகன்ராஜ்.

இவர் அப்படி என்ன பரபரப்பை ஏற்படுத்தினார்?! தன்னிடம் 2ஜி ஊழல் நடைபெற்றதாகக் கூறப்பட்ட அளவுக்கான தொகைக்கு சொத்து இருப்பதாகவும், அதுவும், கோபாலபுரம், போயஸ் கார்டன் என்ற இடங்களில் இருப்பதாகவும் கூறி, தேர்தல் ஆணையத்தில் சொத்து மதிப்பை தாக்கல் செய்ததுதான்!

பெரம்பூர் சட்டசபை இடைத்தேர்தலில் ஜெபமணி ஜனதா கட்சி சார்பில் மயிலாப்பூரைச் சேர்ந்த மோகன்ராஜ் போட்டியிடுகிறார். இவர், காவல் ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது 67 வயதாகும் இவர், தேர்தல் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக, அடிக்கடி தேர்தல்களிலும் போட்டியிடுவார்.

mohanraj jebamani - 2026விருதுநகரில் வைகோவை எதிர்த்து போட்டியிட்டுள்ளார். சிவகங்கையில் ப.சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்டுள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியிலும் மயிலாப்பூர் தொகுதியிலும் போட்டியிட்டார். தற்போது பெரம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

பொதுவாக, தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி மோகன்ராஜ் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு கணக்குகளைப் பார்த்து, தேர்தல் அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்தனராம். அவர், தனக்கு 2ஜி ஊழல் குறித்த செய்திகள் வெளியான போது, அந்தப் புகழ்பெற்ற தொகையான ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு பணம் உள்ளது என்று குறிப்பிட்டால்… யாருக்குத்தான் அதிர்ச்சி வராது!

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

இந்தியாவின் முதல் பணக்காரர் முகேஷ் அம்பானிக்கே ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ளன என்றால், அடுத்தது மோகன்ராஜ்தான் இந்தியாவின் 2-வது பணக்காரர் என்ற அளவில் சொத்து மதிப்பு இருக்கும்!

affidavit2 - 2026

அப்படி என்றால் மோகன்ராஜ், இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்காரரா?! இல்லை. இவரின் உண்மையான சொத்து மதிப்பு சில லட்சம் ரூபாய் அளவுக்குத்தான் இருக்கும். ஆனால் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் எந்த அளவுக்கு கேலிக்கூத்தாக உள்ளன என்பதை வெளிக்காட்டவே, தனக்குத் தெரிந்தே இவ்வாறு செய்துள்ளதாக தெளிவுடன் கூறுகிறார்.

தமிழ்நாடு அரசு உலக வங்கியில் வாங்கிய கடன் தொகையை மக்கள் மனத்தில் காட்டும் விதமாக, தனக்கு உலக வங்கியில் ரூ.4 லட்சம் கோடி கடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.

affidavit3 - 2026

இப்போதுதான் இப்படி ஏறுக்குமாறாக சொத்துக் கணக்கைக் காட்டியிருக்கிறாரா என்றால்,… இல்லை… முந்தைய தேர்தல்களிலும் இப்படி தவறான சொத்து விவரத்தை தாக்கல் செய்திருக்கிறார்.

இது குறித்து மோகன்ரான் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், பாரத திருநாட்டை ஒரு பொய் அஃப்ஃபிடவிட் மூலம் வேரோடு உலுக்கிவிட்டேன்! தேர்தல் ஆணையத்துக்கு கொஞ்சம் ரோஷம் வரும் என்று நம்புவோம்! என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை அடுத்து, ஊடகங்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார் மோகன்ராஜ். இவரது சொத்துக் கணக்கைப் பார்த்து மலைத்துப் போய்… வாய் பிளந்து செய்திகளை வெளியிட்டன ஊடகங்கள்! ஏன் இப்படி..? எவருமே நம்ப இயலாத வகையில் சொத்துக் கணக்கை கூறி இருக்கிறீர்கள் என்று உடகங்கள் உடனடியாகக் கேட்டன. அதற்கு அவர்….

affidavit41 - 2026

வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவில் உண்மையான தகவலை மட்டும்தான் குறிப்பிட வேண்டும் என்பது தேர்தல் கமி‌ஷன் விதி. அதில் தவறான கணக்கை கூறிஇருந்தால் அந்த வேட்பு மனுவை தள்ளுபடி செய்யலாம். ஆனால் வேட்பு மனுவில் எத்தனை தவறான தகவல்களை கூறி இருந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் தேர்தல் அதிகாரிகள் அந்த மனுவை ஏற்றுக்கொள்கிறார்கள். தேர்தல் பணியின் லட்சணம் இப்படித்தான் இருக்கிறது என்பதை மக்களுக்கு காட்டுவதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் சொத்து மதிப்பை இப்படிக் குறிப்பிட்டேன்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

எனது வேட்பு மனுவைப் பார்த்த தேர்தல் அதிகாரி என்னை மேலும், கீழும் பார்த்தார். ஏன் இப்படி குறிப்பிட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார். எனது தகவலில் தவறு இருந்தால் மனுவை தள்ளுபடி செய்யுங்கள் என்று கூறினேன். ஆனால் இது தவறான தகவல் என தெரிந்தும் தேர்தல் அதிகாரி எனது மனுவை தள்ளுபடி செய்யவில்லை. இந்தக் காரணத்திற்காக எனது மனுவை தள்ளுபடி செய்தால் இந்தியாவில் அனைத்து வேட்பாளர்கள் மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும். பிரதமர் மோடி மற்றும் சோனியா தாக்கல் செய்யும் மனுவைக் கூட தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது.

அவர்கள் எல்லாம் எத்தனையோ கார்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் கார் இல்லை என்று பொய் சொல்கிறார்கள். பல வேட்பாளர்களின் வேலைக்காரர்கூட கார் வைத்துள்ளார். ஆனால் வேட்பாளர் தனக்கு கார் இல்லை என்கிறார். இப்படி வேட்பு மனுவில் எல்லாமே பொய்த் தகவல்கள்தான். இருந்தாலும் தேர்தல் ஆணையம் அவற்றை தள்ளுபடி செய்வதில்லை. எல்லாம் வைத்திருப்பவர்கள் தங்களிடம் ஏதுமில்லை என்று பொய் சொல்கிறார்கள். என்னிடம் இல்லாத போது, அதை இருப்பதாகக் கூறி ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறேன்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

நான் முன்பு காவல் ஆய்வாளராகப் பணியாற்றினேன். நேர்மையாக பணி செய்த ஒரே காரணத்துக்காக என்னை பல ஊர்களுக்கும் மாற்றி பழி வாங்கினார்கள். அடுத்து டி.எஸ்.பியாக பதவி உயர்வு கிடைக்க இருந்தது. பழிவாங்கல் காரணமாக 13 ஆண்டு மேலும் சர்வீஸ் இருந்த நிலையில் 45 வயதிலேயே இன்ஸ்பெக்டர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். 1998ஆம் ஆண்டில் இருந்தே இப்படி விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன்… என்றார் மோகன்ராஜ்.

இவரது பேஸ்புக் பக்கத்தில், இப்போது பலரும் அவருக்கு வாழ்த்தையும் உண்மையைப் புரிய வைத்தீர்கள் என்று புகழ்மாலையும் சூட்டி வருகின்றனர். சிலர் கேள்விகளும் கேட்கின்றனர்.

nellai jabamani - 2026
சுதந்திரப் போராட்ட வீரர் நெல்லை ஜெபமணி

நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது, நெல்லை ஜில்லாவில் முதல் முதலாக சுதந்திரக் கொடியை ம.தி.தா. இந்துக் கல்லூரி மைதானத்தில் ஏற்றிய பெருமை இவரது தந்தை நெல்லை ஜெபமணிக்கு உண்டு. தற்போது மோகன்ராஜ் தனது தந்தை வழியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த இது போல் அவ்வப்போது செய்து வருகிறார்!

இவர், சூடாக உரைப்பாக தேர்தல் ஆணையத்துக்கு பச்சை மிளகாயைக் காட்டியுள்ளதால், இவருக்கு பச்சை மிளகாய் சின்னமே கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img