வெள்ளத்தில் நடந்து கொண்டே…. ஓர் இரவு!

டிச.1 செவ்வாய் அன்று மாலை அலுவலகம் முடிந்து 5.30க்கு பஸ் ஏறினேன். 8.30 க்கு தாம்பரம் வந்தேன். பஸ் இல்லை. ரயில் இல்லை. எந்த வாகனமும் செல்லாது என்று அறிவிப்பு!

சரி.. தாம்பரத்திலேயே உறவினர், நண்பர் என எங்காவது தங்கி விடலாம் என்று நினைத்தேன். வீட்டுக்கு வந்து ஒன்றும் வெட்டி முறிக்கப் போவதில்லைதான்! எனக்காகவும் யாரும் காத்திருப்பிலும் இல்லைதான்!

தாம்பரம் பேருந்து நிறுத்தத்தில் மக்களின் நடவடிக்கைகளை பார்த்து கிரகித்துக் கொண்டே வந்தபோது… திடீரென ஒரு பெண்… அங்கிள் நீங்களும் வெயிட் பண்றீங்களா? நல்ல வேளை! என்னை விட்டுட்டுப் போயிடாதீங்க அங்கிள். நானும் 6 மணிலேர்ந்து இங்க காத்திருக்கேன்… என்றாள். எங்கள் குடியிருப்பில் வசிக்கும் எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவி அவள். வெளியூர் செல்ல இருந்தவள் ரயில் ரத்தானதால் வீட்டுக்குத் திரும்ப இருந்தாள்.

புதிய பொறுப்பு தலையில் ஏறியதால்… எப்படியாவது வீட்டுக்குத் திரும்பியாக வேண்டிய கட்டாயம்!

ஏதாவது வாகனம் வரும், செல்லலாம் என்ற காத்திருப்பில் இருந்தோம் பொறுமையுடன்!

ஆனால், வெகு நேரம் காத்திருந்த பயணிகளோ… ஆத்திரத்தில்! காரணம், ஓரிரு தனியார் பஸ்கள் கடந்து சென்றிருந்தன. அவை செல்லும்போது, இத்தனை பேர் உள்ளோமே.. மாநகர பேருந்துகள் குறைந்தது ஒன்றிரண்டாவது ஓட்டினால் என்ன என்று கோபம்…

விளைவு – சாலையில் அமர்ந்தார்கள். ஏற்கெனவே ஏரி நீர் சாலை மறியல் செய்து கொண்டிருக்க… இங்கே இத்தனை பேர் சாலை மறியலில்!

போலீஸார் வந்தனர். சமாதானம் செய்தனர். வண்டிகளை விடத் தொடங்கினர். அங்கிருந்து கூட்டத்தை காலி செய்துவிட்டால் போதும் என முடிவு செய்தாரோ என்னவோ… அதிகாரியின் உத்தரவில் ஓரிரு பேருந்துகள் வந்தன. பெருங்குளத்தூர் வரைதான் போகும் என்ற தகவலுடன்!

ஏறிச் சென்று இறங்கியாச்சு. பெருங்குளத்தூரில் அதற்கும் மேல் மக்கள் வெள்ளம். வண்டி ஏதும் செல்லவில்லை. சாலையில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி விட்டு, விளக்குகளை அணைத்துவிட்டு… பாவம் வண்டியிலேயே பலர் முடங்கிப் போயிருந்தனர்.

அப்போது ஒரு குழு… நடந்து செல்ல தயாராக இருந்தது. க்ரிம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் பணி செய்பவர்கள் மற்றும் சிலர். எல்லாம் ரயில் பயண சிநேகிதர்களாம்!

எங்கண்ணே போகணும்..? கேட்டால்.. மதுராந்தகம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் என்று பதில்கள்.

அவர்களுடன் 2 சிறு பெண்கள் வேறு. உடன் பணி செய்யும் ஒரு பெண். மற்றொரு பெண், பல்லாவரத்தில் ரயிலில் இறங்கி, பஸ்ஸுக்குக் காத்திருந்து, இந்தக் குழுவில் வந்த ஒருவரின் செல்போனை வாங்கி, வீட்டுக்கு தகவல் சொன்ன கல்லூரிப் பெண். அந்தப் பெண் மீது இரக்கப்பட்டு… வாம்மா எப்படியாவது உன்னை பத்திரமா வீடு கொண்டு போய் சேர்த்துடறோம் என்று இந்தக் குழு அழைத்து வந்துள்ளது. அவள் கூடுவாஞ்சேரி செல்ல வேண்டும்.

கேலியும் கிண்டலுமாக, அதே நேரம், அந்தப் பெண்களை சர்வ ஜாக்கிரதையாக சாலையில் நடத்திச் சென்று… தங்கள் கௌரவத்தை நிலை நாட்டினர் அந்தக் குழுவில் இருந்தவர்கள். அந்தப் பொறுப்புணர்வு எனக்குப் பெருமிதம்தான்! அதில் அப்பல்லோவில் ஹெச்.ஆர். பிரிவில் பணி செய்யும் விக்னேஷ்… பணியாற்றும் பொறுப்புக்கே உரிய பொறுப்பில் வழி நடத்தினான். வயதில் சிறியவன் ஆனாலும், உடன் பணி செய்யும் பெண்ணுக்கு காய்ச்சல் வரும் அறிகுறி தெரிந்தபோது, ஓடிச் சென்று ஒரு மருத்துவமனையிலிருந்து தேவையான மருந்துகளுடன் முன் நின்றான்.

ஆயிற்று… வண்டலூர், ஊரப்பாக்கம் வரை வந்தாச்சு! அவ்வளவுதான்! இனி நடப்பதற்கும் வழியில்லை. ஏரி நீர் சாலையில் 3 அடிக்கு மேல் செல்கிறது. நடக்க அனுமதியில்லைன்னு போலீஸார்…!

அதிகாரி ஒருவர் வந்தார். பார்த்தார். சென்றார். அதுவரை கண்டிப்பு காட்டி வந்த போலீஸார் பின்னர் காணவில்லை. தடுப்புகள் மட்டும் அப்படியே இருந்தன. இருப்பினும், வெள்ள நீர் ஓட்டம் கருதி… சாலையோரத்தில் ஒரு மருந்துக் கடை கூரையின் கீழ் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டோம். 3 மணி நேரம் அப்படியே பேச்சும் நக்கல் கேலி கிண்டலுமாக சென்றது. காலை 5 மணி ஆயிற்று. வெளிச்சம் வரத் தொடங்க, நாங்களும் நடைப்பயணத்தை தொடங்கினோம்.

வெள்ள பாதிப்பின் காட்சிகள்… நீருக்கு எவ்வளவு வலிமை என்பது அதில் புரிந்தது. ஒரு அடி அரை அடி உயரத்தில்தான் தண்ணீர் வலதுபுற சாலையில் வேகமாகக் கடந்து ஓடியது. ஆனாலும் அதன் இழுப்புத் திறன் அதிகம் தான்! எத்தனை கார்கள்… ஒன்றன் மீது ஒன்று மோதி… தாறுமாறாக சிதறிக் கிடக்க… 2 பேருந்துகள் இடப்புற சாலையில் கவிழ்ந்து… வாகனங்கள் இருவழிச்சாலையின் ஒரு புறத்தில் மட்டும் செல்லவும் வரவும் முயல… நீரின் வேகத்தில் எதிரெதிர் வண்டிகளும் முட்டி மோதி…

இப்படியாக பார்த்துக் கொண்டே வந்தோம். வண்டலூர் தொடங்கி ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி எல்லாப் பகுதிகளிலும் இடதுபுற சாலையில் கடும் ஆவேசத்துடன் நீர் பெருகி ஓடி, வலப்புறச் சாலையில் வழிந்தோடியது.

அக்‌ஷயா பில்டிங், எஸ்டான்ஷியா உள்ளிட்ட கட்டடங்களின் கீழும், அவற்றை ஒட்டியும் பாய்ந்த வெள்ள நீரினால், அவற்றின் அபாய நிலை கண்டு வருத்தமே மிஞ்சியது.

ஒரு வழியாக 7 மணிக்கு பொத்தேரி வந்து சேர்ந்தோம். அப்போது, ஒரு தனியார் கல்லூரி வாகனம் வர, அவற்றில் ஏறி மறைமலைநகருக்கு அந்தக் குழு பயணமானது…

டிச.2 அதிகாலை பெருங்களத்தூர் – பொத்தேரி நடைப்பயணத்தில் கண்ட காட்சிகள் அநேகம். சாதாரண போக்குவரத்து நடைபெறும் நாட்களில் அந்த சாலையின் நிலையை அப்படியே மாற்றிப் போட்டிருக்கிறது ஏரி உடைந்து உள்ளே புகுந்த நீர்.

அன்று அதிகாலை பொத்தேரி அருகில் எஸ்டான்ஷியா கட்டடம் முன் பாய்ந்தோடி வந்த நீரில் அந்தக் கட்டடம் ஏதோ தண்ணீரில் மிதக்கும் நீர்க்குவளை போல் தோன்றியது. அதன் முன் ஒரு பஸ்.. முன் புறம் கவிழ்ந்து அபாயகரமான வகையில் இருந்தது.

வெள்ளம் வடிந்த பின் இரு தினங்களுக்கு முன்னர் போய்ப் பார்த்தபோது… இடது புறம் மண் பகுதியில் பெரும் மரணப் பள்ளங்கள் தோன்றியிருந்தன.

ஆகவே நண்பர்களே…. ஜி.எஸ்.டி. சாலையில் வரும்போது, தார்ச் சாலையை விட்டு இடது புறத்தில் கார், பைக் களில் வருபவர்கள் இறங்கிவிடாதீர்கள்…! சாலை சீரமைக்கப்படும் வரை!

இப்படியாக, என் ஓர் இரவு ! மறக்க இயலாத டிச.1 இரவு!