பிளாஸ்டிக்குக்கு மாற்று கண்டறிய வேண்டும். நம் வசதிக்காக, ஒரு முறை பயன்படுத்தித் தூர எறியும் குடிநீர் பாட்டில்களை ஒழித்தால் வருங்கால சந்ததி ஓரளவு நிம்மதியாக வாழ முடியும்… பத்து ரூபாய்க்கு விற்பனை துவங்கி, இன்று அக்வா பினா 25 ரூ. ஆகிவிட்டது. மற்றவற்றை ரூ. 20ம், 22ம் என இஷ்டத்துக்கு விற்கிறார்கள்… ஊர் பேர் தெரியாத உள்ளூர் தண்ணீர் வியாபாரிகளும் பாட்டில்களை கடைகளில் அடுக்குகிறார்கள்… போதாக்குறைக்கு அம்மா வாட்டர் பாட்டில்கள்… இவைதான் இப்போது சக்கை போடு போடுகின்றன. மக்கள் அதிகம் வாங்கிச் செல்கின்றனர்…முதல்வரின் படம் அச்சிடப்பட்ட விளம்பரத்துடன்… முதல்வரின் செயல் வரவேற்கத்தக்கது. ஆனால் செயல்முறை கண்டிக்கத்தக்கது. என்ன செய்யலாம்…? என் கருத்தில் தோன்றியது… * ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள பேருந்து நிலையத்திலும், முக்கியமான அரசு அலுவலக வாயில்களிலும் அம்மா வாட்டர் – சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்களை நிறுவி, அவற்றின் மூலம் லிட்டர் ரூ. 5 என்று குடிநீர் விநியோகம் செய்யலாம். அதற்கு பயனாளிகள் ஒவ்வொருவரும், நிரந்தரமாக தங்கள் கைகளில் வைத்திருக்கும் வகையில் பெட் ஜார் – பாட்டில்களை அல்லது நீர் வைக்கும் பாத்திரங்களைக் கொண்டு வர வேண்டும். ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு, தற்போது ஓரளவு மட்டுமே செயல்முறையில் இருக்கும் தண்ணீர் வழங்கும் மையங்கள் போல் கொண்டு வரலாம்.. திருப்பதிக்கு நடைபாதை வழியே நான் சென்றபோது, அங்கங்கே இதுபோன்ற மலிவு விலை குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் சிறப்பாக செயல்படுவதைக் கண்டுள்ளேன்… அவற்றைப் போல் இங்கும் செயல்படுத்தலாம்… உண்மையிலேயே விளம்பர மோகம் இல்லாமல் மக்களுக்கு நல்லது செய்ய எண்ணினால், முதல்வர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம். * ரயில் நிலையங்களில் குடிநீர் என்று எழுதப் பட்டிருக்கும் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு அல்லது பழுதாகி, பயன் தரத் தக்க நிலையில் இருப்பதில்லை. இதற்கான காரணம் ஏன் என்று சில இடங்களில் ரயில் நிற்கும் போது நானும் இறங்கி அங்கே இருக்கும் சிலரிடம் பேச்சுக் கொடுத்தேன். எல்லோரும் சொல்லி வைத்தாற்போல் கூறும் ஒரே காரணம்…. – இந்தக் குடிநீர் குழாய்களால், தண்ணீர் பாட்டில் விற்பனை பாதிக்கப்படுகிறது என்பதால், இங்கே கடை வைத்துள்ளவர்கள், ஏஜென்ஸிகள் இவற்றை (சரி செய்த ஓரிரு நாட்களிலேயே) உடைத்து விடுகின்றனர் என்பதுதான். இதே நிலைமைதான் சுயநல வியாபாரிகள் இருக்கும் எல்லா இடங்களிலும்! * ஒவ்வொரு முறை பெட்டிக் கடைக்கும் மளிகைக் கடைக்கும் போகும்போதும் எந்த வித அகௌரவத்தையும் பார்க்காமல், கிராமப்புற துணிக்கடைகளில் தரும் மஞ்சள் துணிப்பை, அல்லது கட்டைப் பையை எடுத்துச் செல்வது என் வழக்கம். வீட்டில் பிளாஸ்டிக் குப்பைகளைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், ஒவ்வொரு அலுவலகத்திலும் வீடுகளிலும், குப்பைக்கென தனித்தனி சிறிய ரக குப்பைத் தொட்டிகள் இருந்தாலும், அவற்றில் சேரும் குப்பைகளை எடுத்து தூய்மைப் படுத்த சோம்பேறித்தனப்பட்டு, அதனுள்ளும் பிளாஸ்டிக் கவர்களை வைத்து, அவற்றில் சேரும் குப்பைகளை எடுத்துச் சென்று மேலும் மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் சேர வழிவகை செய்கின்றோம்… இதற்கும் மாற்று வர வேண்டும். * பிளாஸ்டிக் கவர்களில் வீணான உணவுப் பொருள்களை மூட்டையாகக் கட்டி அதன் வாயை முடிச்சு போட்டு நாம் தூர எறிவதால், அதனைத் திறக்க முயன்று தோல்வியுறும் பசு மாடுகள், நாய்கள் உள்ளிட்டவை, பிளாஸ்டிக்கையும் சேர்த்துத் தின்று, உயிரிழப்புக்கு வகை செய்து கொள்கின்றன. இதற்கு நாமும் மறைமுகக் காரணமாவோம். *** பிளாஸ்டிக் உபயோகத்தைத் தவிர்க்க நம்மாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம்…! *** நம் பகுதியில், நம் மாநிலத்தில், நல் மழைப் பொழிவுக்கு வழி வகை செய்வோம்..!!
பிளாஸ்டிக்குக்கு மாற்று வேண்டும்
Popular Categories



