அற்புதமான ஒரு ஞாயிறு. திருவரங்கத்தில் காலடி படுவதே புண்ணியம் என்றானபோது, ஆசார்யப் பெருமக்கள் சமாதி கொண்டருளும் திருவரசு மண்ணில் நம் பாதம் படுவதே பெரும் பேறு. ஸ்ரீவைஷ்ணவ லட்சணங்களில் ஒன்று – ஆசார்யரை மனித ஸ்வரூபமாகக் கருதாமலிருத்தல்! அந்த வகையில் வைஷ்ணவ ஆசார்யப் பெருமக்கள் பலரும், தம் ஜீவ ஆத்மாவை பெரியகோவிலான திருவரங்கத்தில், பெரிய பெருமாளான திருவரங்கன் திருப்பாதத்தில், பெரிய (பரம)ஆத்மாவான திருவரங்கன் உள் கலந்து, சரீரத்தை அவன் கண்வளர்ந்தருளும் உபய காவேரி மத்தியிலான திருவரங்கத்தின் புனித மண்ணில் உகுத்தலையே இப்பிறப்பின் நோக்கமெனக் கொண்டு வாழ்ந்தவர்கள். அரங்கன் சந்நிதியை ஒட்டி சுவாமி ராமானுஜருக்கு மட்டிலும் சந்நிதி இருந்தாலும், கொள்ளிடக் கரையில் வைணவ ஆசார்யப் பெருமக்கள் பலரின் திருவரசு சந்நிதிகள் உள்ளன. சுவாமி ராமானுஜரின் குருவானவரும், தமிழ் வேதமாம் திவ்யப் பிரபந்தத்தை சுவாமி நம்மாழ்வார் மூலம் மண்ணில் மீண்டும் நம் கைகளில் கிடைக்கச் செய்தவருமான சுவாமி நாதமுனிகளின் திருப்பேரனார் ஸ்ரீஆளவந்தாரின் திருவரசும் அதில் ஒன்று என்பது ஆச்சரியம்… ஆச்சரியம். திருவரங்கம் நண்பர் விஜி என்ற விஜயராகவனுடன் அவரது பைக்கில் கொள்ளிடக் கரையில் பயணித்தேன். ஓரிடத்தில் பிருந்தாவனங்களாக இருக்க, ஸ்வாமி சற்றே வண்டியை நிறுத்தும். உள்ளே போய் பார்த்துவரலாம் என்றேன். சரி போவோமே… நானும் இங்கே வந்ததில்லை என்று கூறி உடன் வந்தார். அந்த இடத்தை பராமரித்து வரும் பாஸ்கர் என்பவர் வரவேற்று அழைத்துச் சென்று, ஒவ்வொரு பிருந்தாவனமாகக் காட்டிக் கொண்டே வந்தார். அவற்றில் ஒன்று, சுவாமி ஆளவந்தாருடையது என்றார். அந்தத் திருவரசில் ஆளவந்தாரின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. சந்நிதி அழகாகக் கைங்கரியம் செய்யப்பட்டு தூய்மையாகக் கிடக்கிறது. இருப்பினும், அதன் மேலோ பக்கவாட்டிலோ இது சுவாமி ஆளவந்தார் திருவரசு என்று எழுதிப் போடவில்லை. அங்கே விளக்கு ஏற்ற ஏற்பாடு செய்யுங்கள் என்று பாஸ்கரிடம் தெரிவித்து சிறு தொகை கொடுத்து வந்தேன். அடுத்து, பெயர்ப் பலகை அல்லது கல்வெட்டு ஒன்று வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சுற்றிலும் சில பிருந்தாவனங்களில் ஆசார்யப் பெருமக்களின் வரலாறை கல்வெட்டில் போட்டிருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலும் ஸ்ரீரங்கம் ரங்கநாராயண ஜீயர்கள் என்பது தெரிகிறது. சில 80 வருட குறுகிய காலத்துக்குள் அமைந்தவை என்பது தெரிகிறது. இங்கே அருகில்தான் ஆளவந்தார் படித்துறை என்று உள்ளது. தவராசன் படித்துறையும் அருகேதான். இந்த ஆளவந்தார் திருவரசு பற்றி ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாசாரியாரின் குமாரர் வாசுவிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார்… சுவாமி அது, பின்னாளில் வைக்கப்பட்டதாயிருக்கும். அடியேன் விவரம் அறிந்து, கொள்ளிடத்தில் முன்னொரு காலம் வெள்ளத்தில் ஆளவந்தார் திருவரசு அடித்துச் செல்லப்பட்டது என்றும், மகானுபாவர்கள் அதனை சற்று தள்ளிக் கொண்டு வந்து, இப்போது இருக்கும் அந்த இடத்தில் மீண்டும் நிறுவியிருக்கிறார்கள் என்றும், அதுவும் ம்ருத்திகா பிருந்தாவனம் போல்தான் என்றும் கூறினார். இந்த முழு விவரம் எதுவென நமக்குத் தெரியாது. இதற்கு தகுந்த கல்வெட்டு ஆதாரங்களோ வேறெதுவுமோ கிடையாது. இருப்பினும், வைணவ மரபின்படி நம் நம்பிக்கைக்கு உரிய வகையில் இப்போதும் இது இங்கே திகழ்வது நமக்கெல்லாம் தெரியவேண்டும். திருவரங்கம் செல்லும்போது, மறக்காமல் வடக்கு வாசல் கோபுரம் வழியே கொள்ளிடம் செல்லும் வழியில் சென்று, வலது புறம் திரும்பி சற்று தொலைவில் இருக்கும் இந்த பிருந்தாவனங்களையும் தரிசித்து வாருங்கள்.
அரங்கன் அடியார் துயிலும் கரை
Popular Categories



