அதிமுக., சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார் மதுசூதனன்!

Published:

சென்னை :
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் மதுசூதனன் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை இன்று காலை கூடிய அதிமுக.,வின் ஆட்சி மன்றக் குழு வெளியிட்டது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிச. 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. டிச.1ம் தேதிக்குள் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்க மும்முரம் காட்டின. திமுக., சார்பில் மருது கணேஷ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு களம் காண ஆயத்தமாகிவிட்டனர். இந்நிலையில் அதிமுக, சார்பில் யார் தேர்வு செய்யப் படுவர் என்பது குறித்து இழுபறி நீடித்தது.

இதில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் சார்பில், கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் போட்டியிட விரும்பினார். அவருக்கு பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆதரவு அளித்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் தங்களுக்கு வாய்ப்பு கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதன் காரணமாக முதன்முறையாக இடைத்தேர்தலுக்கு என்று கட்சியினரிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டது. போட்டியிட விருப்பம் தெரிவித்து மொத்தம் 28 பேர் மனு கொடுத்தனர். மதுசூதனனுக்கு எதிராக சில அமைச்சர்களே தங்கள் ஆதரவாளர்களை விருப்ப மனு கொடுக்க வைத்தனராம்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இந்நிலையில் வியாழக்கிழமை இன்று காலை, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆட்சிமன்றக் குழு கூடியது. இக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜூ, சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வெகு நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளராக மதுசூதனனையே மீண்டும் போட்டியிட வைப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து மதுசூதனன் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார்.

Related articles

Recent articles

spot_img