ஓக்ஹி புயலுக்கு 8 பேர் பலி; லட்சத்தீவை நோக்கி நகர்ந்தது புயல்!

Published:

கன்னியாகுமரி :

குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது ஓக்ஹி புயல். இந்தப் புயலுக்கு தமிழகம் மற்றும் கேரளாவில் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 4 பேரும், கேரளாவில் 4 பேரும் பலியாகி உள்ளனர்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே கன்னியாகுமரியை அச்சுறுத்திக் கொண்டிருந்த புயல், அங்கிருந்து விலகிச் சென்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவனந்தபுரத்தின் மேற்கு திசையில் 230 கி.மீ., தொலைவில் தற்போது ஓக்ஹி புயல் மையம் கொண்டுள்ளது. புயலால் இனி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பாதிப்பு இல்லை. புயல் சின்னமானது லட்சத்தீவை நோக்கி நகர்ந்து வருகிறது.

ஒக்கி புயல் தீவிரமடைந்து லட்சத்தீவை நோக்கி நகர்வதால் கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக கனத்த மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, தென் தமிழகம், தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் தெற்கு கேரளாவில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும். அதன் பிறகு மழை அளவு படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

புயல் சின்னமானது லட்சதீவு நோக்கி நகர்வதால் கடல் பகுதியில் மணிக்கு 65 முதல் 75 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். சில சமயங்களில் மணிக்க 85 கி.மீ., வேகத்தில் கடல் காற்று வீசக்கூடும். தெற்கு கேரளாவில் அடுத்த 48 மணிநேரத்திற்கும், தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 ஆண்டுகளுக்கு பின், கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ‘ஓக்ஹி’ புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து 10 மணி நேரத்திற்குள் புயலாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகி, முக்கடல் சங்கமிக்கும் இந்திய பெருங்கடலில் புயலாகி அரபிக் கடலுக்குள் நகர்ந்த புயல், தற்போது வடமேற்கு திசையில் லட்சத்தீவை நோக்கி நகர்ந்து வருகிறது.

Related articles

Recent articles

spot_img