பேரிகார்டை இழுத்துச் சென்ற பைக்ரேஸ் இளைஞர்கள் 5 பேர் கைது

Published:

சென்னை கடற்கரைச் சாலையில் தீப்பொறி பறக்க பேரிகார்டுகள் – சாலை தடுப்புகளை இழுத்துச் சென்ற இளைஞர்கள் 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் தாங்கள் செய்ததை சாகசம் என நினைத்து முகநூலில் வீடியோவாக பதிவு செய்திருந்தார் இளைஞர் ஒருவர். அதைக் கொண்டே அனைவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை மெரினா காமராஜர் சாலை, கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலையில் சாலை தடுப்புகளை இழுத்து சென்று அடாவடி செய்த பைக் ரேஸ் வெறியர்களை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் அந்தச் சாலைத் தடுப்புகளை இழுத்துச் சென்றதை அந்தக் குழுவில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து முகநூலில் வெளியிட்டார்.

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டபோது போலீசார் பிடித்து சோதனை செய்தததால் ஆத்திரம் ஏற்பட்டதாகவும், அந்த ஆத்திரத்தில் பேரிகார்டை இழுத்துச் சென்றதாகவும் வீடியோவில் குறிப்பிட்ட அந்த இளைஞர், போலீசாரை ஒருமையில் ஏசியிருந்தார். இதைக் கண்ட காவல்துறையினருக்கு ரத்தக் கொதிப்புதான் வந்ததாம். இதை அடுத்து, சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன், முகநூல் கணக்கை ஆய்வு செய்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய வீடியோவை வெளியிட்ட பீட்டர் என்ற இளைஞரை போலீஸார் கண்டறிந்து கைது செய்தனர். இதை அடுத்து, இந்தக் குழுவைச் சேர்ந்த மேலும் 4 இளைஞர்கள், தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடியோவை வெளியிட்டவர் வியாசர்பாடியைச் சேர்ந்த பீட்டர் என்ற கார்த்திக். இவருடன், எருக்கஞ்சேரியைச் சேர்ந்த பரத், பெரம்பூரைச் சேர்ந்த வெங்கடேசன், தண்டையார் பேட்டையைச் சேர்ந்த முத்துவேல், ஜவஹர் பாரூக் என்ற கல்லூரி மாணவன் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

இதனிடையே, பேரிகார்டை இழுத்துச் சென்று தாம் செய்த அட்டகாசத்தை விளக்கிய பீட்டர், தாம் கெத்து என நினைத்துச் செய்தது பொதுமக்களுக்கு எத்தகைய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்துவிட்டதாகக் கூறி, இனி இந்தத் தவறைச் செய்ய மாட்டேன் என ஒரு தனி வீடியோ பதிவை எடுத்து வெளியிட்டுள்ளார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img