அதிமுக., தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா உருவச் சிலை திறப்பு; நமது அம்மா நாளேடு வெளியீடு

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

சென்னை:

அதிமுக., தலைமை கழகத்தில் ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் முழு உருவச் சிலை திறக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஜெயலலிதா சிலையைத் திறந்து வைத்தனர்.

அதிமுக., தலைமை அலுவலகத்தின் நுழைவு வாயிலில் வாழை மரம், தென்னை ஓலை, பழங்களை கொண்டு அலங்கார வளைவு, தோரணம் அமைக்கப்பட்டிருந்தது. கட்சி அலுவலகத்தைச் சுற்றி ஜெயலலிதாவின் புகழைப் போற்றி பதாகைகள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழாவை அதிமுக., தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செய்தனர். அம்மா பெயரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஜெயலலிதாவின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக., தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி இன்று அச்சிலை திறந்து வைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் சிலை ஆந்திராவில் தயாரிக்கப்பட்ட முழு உருவ வெண்கல சிலை. ஜெயலலிதா இரட்டை விரலை உயர்த்திக் காட்டுவதாக, 7 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம்தான் ஆந்திராவில் இருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது ஜெயலலிதாவின் சிலை.

அதிமுக., தலைமை அலுவலகத்தில் முன்பகுதியில் இருக்கும் எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே ஜெயலலிதா சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதற்காக எம்.ஜி.ஆர். சிலை அருகில் பள்ளம் தோண்டப்பட்டு பீடம் அமைக்கும் பணிகள் நடந்தன. கடந்த 21ஆம் தேதி பீடத்தில் ஜெயலலிதாவின் சிலை நிறுவப்பட்டது. அதேபோல் எம்.ஜி.ஆர். சிலையின் பீடமும் கருப்பு நிற கிரானைட் கற்களால் புதுப்பிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். சிலையின் பீடமும், ஜெயலலிதா சிலையின் பீடமும் அருகருகே சம தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு தலைமை அலுவலகத்துக்கு வந்தனர் முதல்வர், துணை முதல்வர் இருவரும். பின்னர் முற்பகல் 11.10க்கு ஜெயலலிதாவின் உருவச் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் திறந்து வைத்தனர்.

IMG 20180224 WA0016 - 2026

அதன் பின்னர் அதிமுக.,வின் அதிகார பூர்வ நாளேடான “நமது புரட்சித் தலைவி அம்மா” என்ற பத்திரிகையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தொடங்கி வைத்தனர். ஜெயலலிதாவின் பிறந்த நாள் மலரும் வெளியிடப்பட்டது.

ஜெயலலிதா பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் 70 அடி நீள கேக் வெட்டப்பட்டு நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் அதிமுக.,வின் பல்வேறு அணிகள் சார்பில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம், ரத்ததான முகாம், இலவச மருத்துவ முகாம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.