காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நற்பணிகளை நினைவுகூர்ந்த ராம.கோபாலன்

Published:

சென்னை:

இன்று மகா சமாதி அடைந்த காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் நற்பணிகள நினைவு கூர்ந்துள்ளார் இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன்.

அவர் இது குறித்து இன்று வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,

காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதியாக எழுந்தருளி ஆன்மிக பேரொளியை கொடுத்து வந்த ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார். அவரது நினைவை போற்றுகிறோம்.

இருள்நீக்கியில் தோன்றி, காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியாக எழுந்தருளிய ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தமிழகத்தில் நாத்திகம், மதமாற்றம் போன்ற காரிருளை அகற்றிட இந்து சமுதாயத்தை ஒருங்கிணைத்து ஆன்மிக வழியில் பெரும்பங்காற்றியவர்.

இந்து முன்னணி இயக்கத்தின் ஆரம்ப காலம் முதலே உறுதுணையாக இருந்து, நமக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்ததை எண்ணிப் பார்க்கிறோம். திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் ஒரு லட்சம் பேரை முஸ்லீமாக மதமாற்ற செய்ய முயன்றபோதும், கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காட்டில் கிறிஸ்தவர்கள் செய்த கலவரத்தின் போதும் இந்து சமுதாயத்தில் நம்பிக்கையை ஏற்படுத்திட இந்து முன்னணி ஏற்பாடு செய்த பாதயாத்திரையில் பங்கேற்று சிறப்பான பணியைச் செய்தார்.

ALSO READ:  திருவனந்தபுரம் - சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருப்பணியின் போது நேரடியாக எழுந்தருளி அருளாசி வழங்கியவர். பல தாழ்த்தப்பட்ட காலனி பகுதியில் கோயில்கள் அமைவதற்கு பேருதவி செய்தவர். ஏழ்மை நிலையில் உள்ள இந்துக்கள் பசிப் பிணி போக்கவும், நோய் நீங்கவும், கல்வியில் மேம்படவும் அருந் தொண்டாற்றினார்.

ஆன்மீகப் பணியின் மூலம் எல்லா சமுதாயத்தினரின் அன்பையும், மதிப்பையும் பெற்று உலக அளவில் போற்றப்பட்டவராக திகழ்ந்தார். அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் அமைந்திட எல்லாத் தரப்பு மக்களையும் சந்தித்துப் பேசி, நல்லுறவு காண அரும்பாடுபட்டார்.

சுவாமிகள் மீது அவதூறு பரப்பி, அவமானப் படுத்திட, பொய் வழக்கு போட்ட போது, இந்து முன்னணி இயக்கமானது தொடர் போராட்டங்களை நடத்தி காஞ்சி மடத்தின் பாரம்பரியத்தைக் காத்திட களத்தில் இறங்கிப் போராடியது.
சென்ற ஆண்டு சுவாமிகளின் ஜெயந்தி நாளன்றும் இந்து முன்னணி சார்பில் ஒரு குழு நேரில் அவ்விழாவில் கலந்து கொண்டு ஆசி பெற்றது.

இன்றளவும் இந்து முன்னணியின் வளர்ச்சிப் பணியைப் பாராட்டி, அருளாசி வழங்கி வந்தவர் காஞ்சி பெரியவர்.

ALSO READ:  திருக்கோயில்கள்-81 நூல் வெளியீடு!

இன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மகாசமாதி அடைந்துவிட்டார். அவரது இழப்பு ஆன்மிக உலகுக்கும், பாரத தேசத்திற்கும் பேரிழிப்பாகும்.

அவரது அருளாசியோடு இந்து முன்னணி, இந்து சமுதாய மக்கள் பணியில் என்றென்றும் பாடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சுவாமிகளுக்கு, இந்து முன்னணி சார்பில் இறுதி மரியாதை செய்து வணங்குகிறோம்… என்று கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img