திருச்சியில் உள்ள புகழ்பெற்ற வைணவத் தலமான ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று காலை உள்ளே புகுந்த கும்பல் ஒன்று, அத்தனை பாதுகாப்புகளையும் கடந்து கோயில் கருவறைக்குள் சென்றுள்ளது. அந்த கும்பலில் ஒருவன், கோயில் அர்ச்சகரை கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், காலணியை வீசியுள்ளான். இது பக்தர்களிடம் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, பரிகார பூஜைகளுக்காக கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலுக்குள், செருப்பு மற்றும் கத்தியுடன் உள்ளே நுழைந்த சமூக விரோத கும்பலில் ஒருவன் கருவறை அருகே சென்று, அங்கே இருந்த கோயில் அர்ச்சகரை கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், காலணியை எடுத்து கருவறைக்குள் எறிந்துள்ளான். சம்பந்தப்பட்ட நபரை காவலர்கள் பிடித்ததும் அவனுடன் வந்த மற்ற சமூக விரோத கும்பல் தப்பி ஓடியுள்ளது.
கத்தியைக் காட்டி மிரட்டியவனைப் பிடித்து, காவலர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த நபர் குறித்து விசாரித்தபோது, அவன் பெயர் தர்மராஜ் என்றும், கொத்தனாராக வேலை செய்து வருவதாகவும், திருவிடைமருதூர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தனக்கு காதல் தோல்வி மற்றும் திருமணம் கைகூடாத விரக்தியில் இவ்வாறு செய்து விட்டதாகவும் கூறியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்று கூறியுள்ளனர்.
ஆனால், இந்தச் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த பக்தர்கள், இவ்வாறு செய்துவிட்டு போலீஸில் மாட்டுகிறவர்கள் எல்லாம் எப்படி மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று தெரிவிக்கிறார்கள் என்று சந்தேகம் எழுப்புகின்றனர். இதன் பின்னணியில் ஏதேனும் அமைப்புகள் உள்ளனவா? திட்டமிட்ட ரீதியில் இந்தச் சம்பவத்தை அரங்கேற்றி, திசை திருப்ப ஏதாவது முயற்சி நடக்கின்றதா? வாசல் பகுதியில் இருந்து மெட்டல் டிடெக்டர் மூலம் உள்ளே நுழைந்த நபர், கத்தியை வைத்துக் கொண்டு, செருப்பையும் கையில் எடுத்துக் கொண்டு, மூலஸ்தானம் வரை வந்திருக்கிறான் என்றால், கோயில் பாதுகாவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். போலீஸார் என்ன செய்கின்றனர் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
மன நலம் பாதிக்கப்பட்ட நபர் என்றால் இத்தனை கட்டுக்களையும் மீறி, அதெப்படி மிகக் குறிப்பாக கருவறைக்குள் வந்து செருப்பை வீசி, கத்தியைக் காட்டி மிரட்ட எண்ணம் கொண்டிருப்பான் என்றும், இவ்வளவு தூரம் நினைத்ததை ஒரு கும்பலாக வந்து சரியாகச் செய்தவன் மன நலம் பாதிக்கப்பட்டவனாக இருக்க முடியாது என்றும், இந்த சதித்திட்டத்தை போலீஸார் விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆனால் போலீஸார், அவன் ஒரு சைக்கோ தான் எனவும் அவனுக்கு பின்புலத்தில் எந்த அமைப்புகளும் இல்லை பதட்டமடைய வேண்டாம் என்றும் உறுதியாகக் கூறுகின்றனர்.
அண்மையில் தான் கிறிஸ்துவர்கள் சிலர் உள்ளே நுழைந்து பிரார்த்தனை செய்ததாகக் கூறப்பட்டது. அப்போதும் கோயில் பாதுகாவலர் உள்ளே அனுப்பிவைத்த விதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் ஆன்மிக அன்பர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


