சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரிடம் ஐபோன் எனச் சொல்லி விற்று, துணி சோப்பைக் கொடுத்து ஏமாற்றிச் சென்ற இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் ரமேஷிடம் மாலை நேரத்தில் வந்த இளைஞர்கள் இருவர், தங்களிடம் ஐ-போன் விற்பனைக்கு உள்ளதாகவும் குறைந்த விலைக்கு அதனைத் தருவதாகவும் கூறி ஆசை காட்டியுள்ளனர். அதனை நம்பிய ரமேஷும், ரூ.15 ஆயிரம் கொடுத்து அதனை வாங்கியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து ரமேஷ் அந்த ஐபோன் உள்ள பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதில் ஐ-போனுக்கு பதிலாக ஊர்வசி துணி சோப் ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து போலீஸாரிடம் அவர் புகார் தெரிவிக்கவே, மயிலாப்பூர் போலீசார், வங்கி சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு அந்த மோசடி இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.
பொதுவாக, ஆன்லைனில் வாங்கும் பொருள்கள் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பது உண்டு. ஆனால் நேரில் வந்து விற்பனைசெய்யும் பொருள்களிலும் இந்த கோல்மால் நடப்பது வேதனைக்குரியது. குறிப்பாக, பொருளை வாங்கும் போது, புதிய பேக்கிங் செய்யப்பட்ட அட்டைப் பெட்டியாக இருந்தாலும் அதனை வாங்கி பிரித்துப் பார்த்து வாங்குவது நல்லது. அதைவிட, பில் எதுவும் இல்லாமல் இதுபோன்ற முறையற்ற வகையில் பொருள்களை வாங்குவது நல்லது!