
இந்தியா-பாகிஸ்தான் எல்லையான ஜம்முவில் நேற்று முன் தினம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் வீர மரணம் அடைந்தார்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீரில் உள்ள சுந்தரபாணி பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில், சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தூர் ஊராட்சி வெத்தலைக்காரன் காடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன்( 40) துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இவரின் மனைவி பெயர் தமிழரசி. இவர்களுக்கு 6-ம் வகுப்பு படிக்கும் ரோகித் என்ற மகனும், 2-ம் வகுப்பு படிக்கும் சுபஶ்ரீ என்ற மகளும் இருக்கிறார்கள். மதியழகன் கடந்த 1999-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து ஹவில்தார் பதவியில் பணியாற்றி வந்த நிலையில் இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளது.

இதுபற்றி மதியழகனின் தம்பி குமார், “எங்க அண்ணன் ரொம்ப துணிச்சல் மிக்கவர். எதையும் உறுதியாக நின்று எதிர்கொள்ளக் கூடியவர். அவருடைய மரணத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த 5 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்களித்து விட்டு அன்று இரவு புறப்பட்டுச் சென்றார். அப்போதுதான் நாங்கள் அவரை நேரில் இறுதியாகப் பார்த்துப் பேசினோம்.
அவருடைய குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். என் அண்ணன் மகன் ரோகித் 6-ம் வகுப்பு முடித்து 7-ம் வகுப்பு செல்கிறான். அவனுக்கு ஆன்லைன் வகுப்பு இருப்பதால் செல்போன் வாங்குவதற்காக இறுதியாக எங்க அண்ணியிடமும் குழந்தையிடமும் பேசிக் கொண்டிருந்தார். இப்படி திடீரென மரணம் அடைந்துள்ளது, எங்க குடும்பத்தையே நிலைகுலைய வைத்துள்ளது” என்றார் வேதனையுடன்.
தன் கணவரின் மரணச் செய்தி கேட்டதிலிருந்து அழுது கொண்டிருக்கும் தமிழரசி, “இனி என் குழந்தைகள் அப்பாகிட்ட போனில் பேசணுமுன்னு கேட்டால் நானென்ன பதில் சொல்லுவேன். கனவுல வந்துட்டு போன மாதிரி உள்ளாட்சித் தேர்தலுக்கு வந்து ஓட்டு போட்டுட்டு லீவுக்கு வர்றேன்னு உடனே கிளம்பிப் போயிட்டாரு. இனி என்றைக்கு என் வீட்டுக்கு வருவார்?” எனத் தேம்பி தேம்பி அழுதார்.

ராணுவ வீரரின் மரணத்தால் அந்தப் பகுதியே சோகமயமாக காட்சி அளிக்கிறது.
ராணுவ வீரர் மதியழகன் உடலை இன்று சொந்த ஊருக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மதியழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, அவரது குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இதேபோன்று, பாமக நிறுவனர் ராமதாஸும் மதியழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.