வங்கதேச அணியுடனான முதல் டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் (டி/எல் விதிப்படி) வென்றது.
வார்னர் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தது..
இதை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச தொடக்க வீரர்கள் தமிம் இக்பால், சவும்ய சர்க்கார் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர்.
வங்கதேசம் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன் குவித்தது. மகமதுல்லா அதிகபட்சமாக 35 ரன் எடுத்தார். லிட்டன் தாஸ் 24, கேப்டன் ஷாகிப் ஹசன் 19, முஷ்பிகுர், ஆரிபுல் ஹக் தலா 15, மிராஸ் 11 ரன் எடுத்தனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் கென்ரிக் வில்லியம்ஸ் 4, கீமோ பால், நர்ஸ் தலா 2, ரஸ்ஸல் 1 விக்கெட் வீழ்த்தினர்.
143 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தனது இன்னிங்சை தொடங்கும் முன்பாக கனமழை கொட்டியதால், 11 ஓவரில் 91 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
தொடக்க வீரர்கள் பிளெட்சர் 7, லூடிஸ் 2 ரன்னில் வெளியேற, ரஸ்ஸல் – சாமுவேல்ஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 42 ரன் சேர்த்தது.
சாமுவேல்ஸ் 26 ரன் அடித்தார். மேற்கிந்திய தீவுகள் அணி 9.1 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 93 ரன் எடுத்து (டி/எல் விதிப்படி) வென்றது. ரஸ்ஸல் 35 ரன் (21 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), பாவெல் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் முஸ்டாபிசுர் 2, ருபெல் 1 விக்கெட் வீழ்த்தினர்.
ஆந்த்ரே ரஸ்ஸல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 போட்டி லாடர்ஹில் மைதானத்தில் 4ம் தேதி நடைபெறுகிறது.



