ஆந்திர முதல்வர் உருவ பொம்மை எரிப்பு: கோவையில் மாணவர்கள் 20 பேர் கைது

andhra-cm-coimbatoreகோவை: திருப்பதி வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கோவையில் ஆந்திர முதலமைச்சர் உருவ பொம்மை, வனத்துறை அமைச்சரின் உருவப்படம் ஆகியவற்றை எரித்து சாலைமறியலில் ஈடுபட்ட மீத்தேன் திட்டத்திற்கெதிரான மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஏப்ரல் 7ல் தமிழக கூலித்தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர காவல்துறை சுட்டுப் படுகொலை செய்தது. செம்மரக்கடத்தல் மாஃபியாக்களை சுட்டுக்கொல்லாமல் அப்பாவி தமிழகத் தொழிலாளர்களை போலி என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது திட்டமிட்ட சதி என்றுகுற்றம் சாட்டிய மாணவர்கள், ஆந்திர அரசுக்கு எதிராகவும் தமிழக அரசை கண்டித்தும் திங்கள் கிழமை இன்று சாலைமறியல் செய்தனர். மீத்தேன் திட்டத்திற்கெதிரான மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோவை-சத்தி சாலை கோவில்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், செம்மரக்கடத்தல் மாஃபியாக்களைப் பாதுகாக்கும் ஆந்திர முதலமைச்சரின் உருவ பொம்மையையும் வனத்துறை அமைச்சரின் உருவ படத்தையும் தீயிட்டு எரித்தனர். அவர்களை பின்னர் போலிஸார் கைது செய்தனர்.