பதனி இறக்க மரம் ஏறியவர்… மாரடைப்பில் இறந்து தொங்கிய பரிதாபம்!

Published:

panai person heart attack - 2026

ஊத்தங்கரை அருகே பனை மரத்தில் பதனி இறக்க மரம் ஏறியவர், திடீர் மாரடைப்பில் இறந்து மரத்திலேயே தொங்கினார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் தட்டித் தட்டி கீழே இறக்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர், பதனி இறக்குவதற்காக அப்பகுதியில் உள்ள பனை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மரத்தில் தொங்கிய நிலையில் அவர் உயிர் பிரிந்துள்ளது. திடீரென ஏற்பட்ட இந்தச் சம்பவத்தால் செய்வதறியாது திகைத்த அவரது மனைவி கதறி அழுதுள்ளார். உடனே கணேசனின் குடும்பத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அவர்களாலும் கணேசனின் உடலை இறக்க இயலவில்லை. உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பனை மரத்தில் தட்டித் தட்டி, உலுக்க வைத்து, பின்னர் கணேசன் உடலை மீட்டனர்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

உயிரிழந்த நிலையில் தொங்கியதால் அவரது உடலை தீயணைப்புத் துறையினர் அலட்சியத்துடன் மீட்டதாக உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் வேதனை தெரிவித்தனர். அதன் பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கணேசனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கணேசன் குடும்பத்தார் மற்றும் கிராமத்தினரின் புகாருக்கு பதிலளித்த தீயணைப்புத் துறையினர், தங்களிடம் பெரிய அளவிலான ஏணி உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள் இல்லாததால் வேறு வழியின்றி இவ்வாறு செய்ததாக சமாதானம் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related articles

Recent articles

spot_img